திமுக மேலிடத்தின் நெருக்கடியால் கடையம் ஒன்றியக்குழு தலைவர் ராஜினாமா

கட்சி மேலிடத்தின் நெருக்கடி காரணமாக கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் 10-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 13-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

திமுக சார்பில் ஜெயக்குமாரையே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பப்படுள்ளது. ஆனால், திடீரென செல்லம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு செல்லம்மாள் வெற்றிபெற்றதாகவும், இவரைத் தேர்ந்தெடுக்க திமுக ஒன்றியச் செயலாளர் குமார் ஏற்பாடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, திமுக மேலிடத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவர் செல்லம்மாள் நேற்று தனது தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹெலனிடம், தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மேலிட நிர்ப்பந்தம் காரணமாக இவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, செல்லம்மாளிடம் கேட்டபோது, “எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார். எனினும், வார்டு உறுப்பினராக அவர் நீடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE