விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை உத்தரவாதத்துடன் கடன்: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை உத்தரவாதத்துடன் கடன் வசதி பெறும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாக்காமல் கிராம அளவில் ஒன்றுசேர்ந்து மதிப்புக் கூட்டி, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் கிடங்குகள், தரம் பிரிப்பு மையங்கள், குளிர்சாதனக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். இத்தகைய உட்கட்டமைப்புகளுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

எனவே, கிராம அளவில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக முன்வரும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (Farmer Producer Organizations) வட்டி மானியத்துடன் கடன் வசதி செய்து தருவதற்காக, வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதி (Agriculture Infrastructure Fund) எனும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் எத்தகைய பணிகளுக்காக கடன் வசதி பெறலாம்?

இத்திட்டத்தின் கீழ், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோகத் தொடர் சேவை (Supply chain services including e-marketing platforms), சேமிப்புக் கிடங்குகள் (Warehouses), சேமிப்புக் கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள் (Pack Houses), விளைபொருட்களின் தரத்தை மதிப்பிடுவதற்கான அமைப்புகள் (Assaying Units), தரம் பிரித்து, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள் (Cold chains), போக்குவரத்து வசதிகள் (Logistics facilities), முதன்மை பதப்படுத்தும் மையங்கள் (Primary Processing Units), பழங்களை அறிவியல் ரீதியாகப் பழுக்க வைக்கும் அறைகள் (Ripening Chambers) போன்ற அறுவடைக்குப் பின் மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

மேலும், விவசாயிகள் குழுக்களாக இணைந்து, வேளாண்மை இயந்திர வாடகை மையம் தொடங்குவதற்கும், சூரிய சக்தி மோட்டார் அமைப்பதற்கும், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன, துல்லியப் பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர்த் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெறமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் எவ்வளவு கடன் பெற முடியும்?

இந்நிதியின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். வங்கிகள் விதிக்கும் வட்டி வீதத்தில் ஏழு ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவிகிதம் வட்டித் தள்ளுபடி (Interest Subvention) செய்யப்படும். ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெற்றால், ரூ.2 கோடிக்கு மட்டும் 3 சதவிகித வட்டித் தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

யார் யார் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்?

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations), சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups), கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (Joint Liability Groups), தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACCS), விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), வேளாண் தொழில்முனைவோர் (Agri Entreprenuers), புதியதாகத் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் (Start ups), மத்திய/ மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், மாநில முகமைகள் / வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுமங்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற இயலும்.

தகுதியுடைய பயனாளி நிறுவனம் தனியார் அமைப்பைச் சார்ந்து இருந்தால், அதிகபட்சமாக 25 வேறுபட்ட இடங்களில் வேளாண் உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குக் கடன் வசதி பெற முடியும். மாநில முகமைகள், தேசிய மற்றும் மாநிலக் கூட்டுறவு கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுக்கள் (APMC), ஒன்றுக்கு மேற்பட்ட உட்கட்டமைப்புகளுக்கான திட்டங்களை, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தலாம். ஒவ்வொரு திட்டத்திற்கும் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற முடியும்.

இத்தகைய வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்குத் தேவைப்படும் கடன் தொகையை வழங்குவதற்காக, அகில இந்திய அளவில் 25 பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (Scheduled Commercialized Bank), மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9% மட்டுமே. வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 3 சதவிகிதம் வட்டித் தள்ளுபடியில் கடன் பெறலாம். இது தொடர்பாக, கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், 2020- 2021 முதல் 2032- 33 வரை, ரூ.5,990 கோடி அளவுக்குக் கடன் வசதி தந்து, வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைந்தே பெற்றுக்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் உள்ளதால், அரசு அறிவித்துள்ள வட்டித் தள்ளுபடியுடன் இந்தக் கடன் வசதியைப் பெற விரும்பும் நபர்கள் தங்கள் திட்டத்திற்கான விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களையோ, வங்கி மேலாளர்கள் அல்லது நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ தொடர்புகொண்டு பயனைடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு வேளாண் உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்