தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தம் 8 கட்டங்களாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தைக் கொண்டு வழங்கப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது; மாநிலக் கல்விக் கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதல்வர் உறுதியளித்த நாளிலேயே புதியக் கல்விக் கொள்கை அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது.
» அரசு அதிகாரிகளை மிரட்டும் போக்கை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
» முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் தொழிற்கல்வி இணை இயக்குனர் 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நவம்பர் 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மொத்தம் 10 பணி நாட்களுக்கு புதியக் கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் பற்றி ஆசிரியர்களுக்கு இனையவழியில் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை மேலும் 7 கட்டங்களாக இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின்றன. இந்தப் பயிற்சியை டெல்லியைச் சேர்ந்த கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (Centre for Cultural Resources and Training) அளிக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை முந்தைய அதிமுக அரசும் நடைமுறைப்படுத்தவில்லை; இப்போதைய திமுக அரசும் புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?
ஒரு கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான அம்சங்களில் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதில்லை. மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் தான் அதிக அளவிலான கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காரணம் மொழிக் கொள்கையின் வழியாக இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவையும், கலை மற்றும் கலாச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கலைகள் மற்றும் கலாச்சாரத்தையும் திணிக்கப்படும் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்து தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், புதியக் கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது தேவையற்ற ஒன்று.
புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து பயிற்சியளிக்க உள்ள நிறுவனமான கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கச் செய்வது புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டின் கதவுகளை திறந்து விடுவதற்கு ஒப்பானதாகும். இதை அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு இப்போது செயல்படுத்தி வரும் ‘‘இல்லம் தேடி கல்வி’’ திட்டம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சைகள் தேவையில்லை என்றும், தமிழ்நாட்டில் புதியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது என்றும் நேற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு புதிய மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
பட விளக்கம்: மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் கல்வி கற்பதை பார்வையிட்டார்.
அந்த செய்தி மக்களைச் சென்றடைவதற்கு முன்பாகவே புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து மத்திய அரசு நிறுவனத்தைக் கொண்டே பயிற்சியளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை நம்ப முடியவில்லை. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? என்பதும் தெரியவில்லை.
கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கென உள்ள தனித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது. அந்தத் தனித்துவத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் தமிழ்நாட்டில் இடம் அளித்து விடக் கூடாது.
எனவே, தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தம் 8 கட்டங்களாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தைக் கொண்டு வழங்கப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago