கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்:

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 29-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.

30, 31-ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிககனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

31-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி,தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 - 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீன வர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE