பெகாசஸ் விவகாரம்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி வரவேற்பு

By செய்திப்பிரிவு

பெகாசஸ் ஒட்டுக் கேட்கும் விவகாரம் தொடர்பாக மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

“இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக்கேட்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவின் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆரோக்கியமான விவாதம் நடத்த பாஜக தயாராக இல்லை. மடியில் கனம் இருப்பதால் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

பெகாசஸ் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திருக்கிறது. இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கண்காணிப்பில் இணைய (சைபர்) நிபுணத்துவம் பெற்ற இருவரை உச்ச நீதிமன்றம் நியமித்திருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து, நாட்டின் பாதுகாப்பை எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று பொட்டில் அடித்தாற்போல் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பு வாதங்களை உறுதியாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

உளவு பார்த்த விவகாரத்தில் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டுவதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மவுனமாக்கிவிட முடியாது என்றும், தனிமனித உரிமைக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அவசியம் என்றும் கூறியதன் மூலம், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'குட்டு' வைத்துள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று அளித்த பதில் தெளிவற்ற வகையில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஒரு அம்சத்தின் அடிப்படையிலேயே சுதந்திரமாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்க முகாந்திரம் இருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஜனநாயகத்தின் முக்கியத் தூணான பத்திரிகை சுதந்திரத்துடன் இந்தப் பிரச்சினை தொடர்புடையதாக இருப்பது கவலைக்குரியது என்பதையும் உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கை பத்திரிகைகள் மீது நடத்திய தாக்குதல் என்பதையும் நீதிபதிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியக் குடிமக்களை உளவு பார்த்திருப்பதன் ஆபத்தான சூழலைக் கவனித்து, அதன் அடிப்படையிலேயே நிபுணர் குழு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களை வேவு பார்த்த பெகாசஸ் உளவு மென்பொருள் இந்தியக் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதா? இத்தகைய உளவு மென்பொருள் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர்கள் குழு மூலம் பதில் கிடைக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தனியுரிமை என்பது ஊடகவியலாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்களின் தனிப்பட்ட அக்கறை அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தனியுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு உரக்கச் சொல்லியிருக்கிறது.

மற்ற எல்லா உரிமைகளையும் போலவே, தனியுரிமையும் நியாயமானதுதான் என்றும், இத்தகைய தனியுரிமை அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை வரவேற்கிறேன். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாட்டில், பாதுகாப்பு விஷயங்களைத் தவிர, வேறு காரணத்துக்காக தனி நபர்களைக் கண்மூடித்தனமாக உளவு பார்க்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இப்பிரச்சினையை எழுப்பித் தீர்வு காண முயன்ற எதிர்க்கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்