திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் கரோனா தொற்று பரவல் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்தாண்டு தீபத் திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் வளர்ச்சிப் பணிகள், கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ரூ.55.45 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழங்கினர்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியத்தின் கீழ் 7 பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதலும் கோயில்களில் முடி இறக்கும் 8 பணியாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் ஊக்கத் தொகையும், கோயில் அன்னதான திட்டத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ‘போக்’ சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 கோயில்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட தங்கத்தேரை அமைச்சர் சேகர்பாபு இழுத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஈசான்ய லிங்க மைதானம் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கட்டி யுள்ள தங்கும் விடுதியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அமைச்சர் சேகர் பாபு, செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘அண்ணாமலையார் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற கோயில்களில் ரூ.84 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தி.மலையில் தினசரி 25 பேராவது கரோனா தொற்றுக்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கரோனா தொற்றின் வேகம் கணக்கிட்டு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதுடன் அமைச்சர் எ.வ.வேலு வைக்கும் கோரிக்கை மற்றும் தொற்று ஏற்படாது என்று தெரிந்தால் நாங்களும் ஆய்வு செய்து தீபத்திருவிழாவில் பக்தர் களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு நிச்சயம் நிறைவேற்றப்படும்.

கோயில்களில் உள்ள 65 தங்கத் திருத்தேர்கள், 49 வெள்ளி திருத்தேர்கள் இன்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு உலா வர முதல்வர் அனுமதி அளித்தள்ளார். தி.மலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோயில் முழு திட்ட வரைவு படம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் காலத்துக்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு முதல் கட்ட ஆய்வு செய்யப்படும். அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அனைத்து விதமான வசதிகளும் முழுமையாக ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE