பருவமழை முன்னெச்சரிக்கை; அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"இத்தகைய ஒரு அவசரக் கூட்டத்தை நமது அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதைவிட, இயற்கை ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இயற்கையின் அழைப்பை ஏற்று நாம் இங்கே கூடி இருக்கிறோம். இயற்கையை முறையாகக் கையாண்டால் அது கொடை! முறையாகக் கையாளவில்லை என்று சொன்னால், அதுவே பேரிடராக மாறிவிடும்.

இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு நாம் தவறும்போது, அது, தான் யார் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது. எனவே, இயற்கையைக் கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.

இயற்கையின் சூழலானது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக அதன் மாறுதல் புதிராக இருக்கின்றது. குறிப்பிட்ட காலம் மழைக்காலம், குறிப்பிட்ட காலம் கோடைக்காலம் என்று வரையறுக்க முடியாத அளவுக்குக் காலமாற்றம் இப்போது கடுமையாகி வருவதை அதிகாரிகள் அனைவரும் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது மட்டுமல்ல, எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை, மக்களுடைய உயிர் காத்தல். அந்தக் கடமையைச் சரிவரச் செய்வதற்காகத்தான் நாம் இங்கே கூடி இருக்கிறோம்.

தமிழகத்தில் இன்று முதல், வடகிழக்குப் பருவமழை தொடங்கப் போகிறது என்றும், இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்துக்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப் பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.

இந்த அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும், 17 மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

கடந்த 24-9-2021 அன்று, 'வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்' குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகளை நான் வழங்கியிருக்கின்றேன்.

தலைமைச் செயலாளர் தலைமையில் 11-9-2021 அன்று முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட கருத்துகளை நான் உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை.

அரசுத் துறையின் செயல்பாடும், பொது மக்களின் எண்ணமும் ஒன்றிணைய வேண்டும். இயற்கையை எதிர்கொள்ளும் மனநிலையை மக்களுக்கு முதலில் உருவாக்க வேண்டும். அதற்காக, முன்னெச்சரிக்கை முயற்சிகளாக அரசு எதையெல்லாம் செய்யவிருக்கிறது என்பதையும் மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் மக்களோடு இணைந்தே இருக்கும்படி நீங்கள் திட்டமிட வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளிலிருந்து வரப்பெறும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வத் தொண்டு அமைப்புகளை நீங்கள் தயவுசெய்து ஊக்கப்படுத்த வேண்டும்.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்பட வேண்டும்.

இந்த மையங்களைப் பொதுமக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவல் அனைத்துப் பொதுமக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல்துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலன்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப் போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில், மீனவர்கள் குறித்துச் சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீனவளத்துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத்துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து மீனவர்களது உயிரும் நமக்கு முக்கியம் என்பதைக் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் நினைவில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

பருவமழைக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நீங்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிக்கெனத் தனித்தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள், கடலோர மீனவக் குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்தக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அவசரகாலப் பணிகளை மாவட்டங்களில் மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வுசெய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நானே சென்று, நேரடியாகப் பார்வையிட்டேன்.

காந்தி மண்டபம் சாலை மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் தூர்வாரக்கூடிய பணியினையும், வண்டல் வடிகட்டும் தொட்டிகளைத் (Silt Catch Pit) தூய்மைப்படுத்தும் பணியினையும், மழை / வெள்ளநீர் தங்கு தடையின்றிச் செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத் தாமரையினை அகற்றும் பணியினையும், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியினையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியினையும் அன்று நேரிடியாக நான் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதேபோல், நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளைக் கடந்த 20ஆம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள் / நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுக் கொள்ளளவை எட்டியுள்ள அணைகள் / நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அணைப் பாதுகாப்பு, அணைகள் / நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்துப் பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழைக் காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின்கடத்திகளைச் சரிசெய்திடவும், தூண் பெட்டிகளை (Pillar Box) உயர்வான இடங்களில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழை நீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களைத் தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மழைக்காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

உயிர் காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும்.

இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் தடுக்கும் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக உணர்வீர்கள். 'இயற்கையை இயைந்து வெல்வோம்!' என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்