கருப்புப் பூஞ்சையால் நுரையீரல் பாதிப்பு: பகுதி நுரையீரலை அகற்றி நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

By க.சக்திவேல்

கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட கருப்புப் பூஞ்சை தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த சின்ன சூரகாய் பகுதியைச் சேர்ந்தவர் எல்.கோவிந்தராஜன் (37). கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 6 மாதங்களாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சளியில் ரத்தம் வந்ததால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், நுரையீரலில் கருப்புப் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், நோயாளி கோவை அரசு மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கருப்புப் பூஞ்சை பாதிப்பானது இடது பக்க நுரையீரலின் கீழ்ப்பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து நுரையீரலைச் சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இடது பக்க நுரையீரலின் கீழ்ப் பகுதியை அகற்ற முடிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, ''இடது பகுதியில் உள்ள நுரையீரலை அகற்றினால் மட்டுமே பிற பகுதி நுரையீரலுக்கும், சுற்றியுள்ள இதயம், ரத்தக் குழாய்களுக்குப் பூஞ்சை பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. எனவே, நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சீனிவாசன், உதவிப் பேராசிரியர்கள் அரவிந்த், இளவரசன், மயக்கவியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம், உதவிப் பேராசிரியர் சதீஷ், செவிலியர்கள் பொற்கொடி, கிருத்திகா, சுசிபாக்கியம், மல்லிகா, சகிலாபானு, ரீனா, மெட்டில்டா, அம்பிகா, தமிழ்செல்வன், பிரவீனா ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். நோயாளி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதே அறுவை சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும்’’ என்று டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்