சுய உதவிக் குழுக்களின் பொற்காலம் திமுக ஆட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சி என்பது சுய உதவிக் குழுக்களின் பொற்கால ஆட்சி என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

''இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக கரோனாவில் இருந்து வென்று வரும் இக்காலகட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும்.

இப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்குக் கடன் வழங்குவதை அதிகரிக்கவும்; பொருளாதாரம் புத்துயிர் பெறவும்; தொற்று நோய்களின்போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை மாற்றவும் வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளர்ச்சிக்குக் குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களும் வளர வேண்டும் - தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும் - அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.

* கரோனா காலத்துப் பின்னடைவுகள் என்று பட்டியலிட்டால் அது மிக மிக நீளமானது. ஆனால், அதே நேரத்தில் அது பல நன்மைகளை மறைமுகமாகச் செய்துள்ளது. நம்மை யார் என்று நமக்கே காட்டி இருக்கிறது. கரோனா என்ற உலகளாவிய பெருந்தீமையை வெல்லும் ஆற்றல் உள்ளவர்கள் நாம் என்பதை நமக்கே காட்டியுள்ளது. ஒருசில மாதங்களில் நமது மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பை நாம் சீர் செய்தோம். இதுபோன்ற பேரிடர்க் காலத்தில் மருத்துவத் துறை மட்டுமல்லாது, அனைத்துத் துறைகளும் மருத்துவத் துறையாக உருமாற்றம் அடைந்து மாநிலத்தையும் மாநில மக்களையும் நாம் காப்பாற்றினோம்.

* ஊரடங்கு காலம் என்பது தவிர்க்க முடியாதது. ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே கரோனா பரவும் சங்கிலியை உடைக்க முடியும். அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு 4000 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். 14 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினோம். மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில்தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்!

ஏழை எளிய மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும்

* ஏழை எளிய மக்கள், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும். வங்கிச் சேவைகள் அவர்களுக்குப் பயன்பட வேண்டும். தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் திட்டமிடுகிறது. மக்களுக்கு ஓரளவு நிதி உதவி செய்கிறது. கூடுதல் நிதியை அந்த மக்கள் வங்கிகள் மூலமாகப் பெறுகிறார்கள். அந்தத் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தாக வேண்டும்.

கடன்களைச் சும்மா தருவது இல்லை. சும்மாவும் தர முடியாது. தகுதியானவர்களுக்குக் கடன்களைக் கொடுப்பதன் மூலமாக வங்கியும் வளரும், மக்களும் வளர்வார்கள். இந்தப் பரஸ்பர நிதி நட்பானது நிலைத்து நீடிப்பது என்பது மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.

* திமுக ஆட்சி என்பது சுய உதவிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும். சுய உதவிக் குழு இயக்கம் தமிழ்நாட்டில் 1989- 90ஆம் ஆண்டில் பிறந்தது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக் கவனம் செலுத்தி நடத்தினேன். அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அது திறம்பட நடத்தப்படவில்லை.

சமூக மறுமலர்ச்சிக்குக் குறிப்பாகப் பெண்களின் உயர்வுக்கு இது மிக மிக முக்கியமான திட்டமாகும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை, 4,951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் கடன் பெறுவதற்குத் தங்களின் கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வங்கிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்