பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களை அலைக்கழிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்: நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கடிதம்

By செய்திப்பிரிவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைக்கழிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 25) உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதிய கடிதம்:

"தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) விரிவுரையாளர்கள் பணிக்கான அறிவிக்கை கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அந்தத் தேர்வுகளில் 156 பேரின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்திப் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1,060 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படியாக ஒத்திவைக்கப்பட்ட கணினி வழித் தேர்வினை 2021 அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை நடத்திட ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

பொன்முடி: கோப்புப்படம்

ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டு ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து நீதிமன்றம் அத்தேர்வை ரத்து செய்து மறுபடியும் தேர்வு நடத்தப்படுவதைக் காரணம் காட்டி, ஒவ்வொரு தேர்வருக்கும், தேர்வு நடக்கும் இடத்தை மனம்போன போக்கில் மாற்றி வெவ்வேறு மாவட்டங்களுக்குப் போட்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் பல தேர்வர்களுக்குப் பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களைத் தேர்வு மையமாகப் போட்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் போடப்பட்டுள்ளது.

அதேபோல், தென் மாவட்டங்களில் இருக்கும் தேர்வர்களுக்கு, வட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு இடங்களில் போடுவதால் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அலைச்சலும், பொருளாதார இழப்புகளும்தான் ஏற்படும்.

அறிமுகம் இல்லாத மாவட்டத்தில் போடுவதால் தேர்வுக்கு முந்தைய நாளே சென்று அருகில் எங்காவது தங்க வேண்டும்; கூடவே பெற்றோர்கள் செல்ல வேண்டும்; குறிப்பாக மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

மேலும் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில், எந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டுமென்பது தேர்வுத் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதும் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீட் தேர்வுக்கு உடை கட்டுப்பாடுகளுடன் மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இதே தவறைச் செய்கிறது. இதனால் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பிரச்சினையில் தாங்கள் உடனடியாகத் தலையீடு செய்து, தேர்வர்கள் சிரமத்தைக் கணக்கில் கொண்டு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்தி வைத்துவிட்டு, குறைகளைச் சரி செய்த பிறகு, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு தேர்வரும் குறிப்பிட்டிருக்கும் தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்