இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

By செய்திப்பிரிவு

திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்‌சி அளிக்கும் பொன்னாள் இது என்று தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதினை வழங்கினார்.

விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியத் திரைத்துறையில்‌ தங்களின்‌ அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின்‌ மிக உயரிய விருதான மற்றும்‌ வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப்‌ பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின்‌ சார்பாகவும்‌, என்‌ சார்பாகவும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இந்நாள்‌, திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்‌சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும்‌. இந்தியத்‌ திரை உலகிற்கான தங்களின்‌ வியத்தகு பங்களிப்புடன்‌ பொது வாழ்க்கையிலும்‌ தனிப்பட்ட வாழ்விலும்‌ தங்களின்‌ தலைசிறந்த பண்பினால்‌ நம்‌ நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர்‌ நீங்கள்‌.

நீங்கள்‌ நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள்‌ பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்''‌ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE