பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்காக பல நூறு கி.மீக்கு அப்பால் மையங்களை ஒதுக்கி தேர்வர்களை அலைக்கழிப்பதா?- ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) 1060 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு வரும் 28,29,30,31 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 129 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மையங்கள் தேர்வர்களின் ஊரிலிருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுகளில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கணினி மூலம் ஆன்லைன் முறையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 4 நாட்களுக்கு 8 வேளைகளாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதால், எந்த சிக்கலும் இல்லாமல் அவற்றை நடத்த முடியும். ஆனால், தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள் வெகு தொலைவுக்கு அப்பால் ஒதுக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், நெல்லை மாவட்டதேர்வர்களுக்கு திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டத்தினருக்கு திருவாரூர் என மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கருவுற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில், எந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வர்களை இதைவிட கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்க முடியாது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு செல்ல ஒரு நாள் பயணம், ஒரு நாள் ஓய்வு என குறைந்தது இரு நாட்களுக்கு முன்பே செல்ல வேண்டும்; அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். இதற்காக தேர்வர்கள் ரூ.4000 முதல் ரூ.6000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஏழைக் குடும்பத் தேர்வர்களுக்கு சாத்தியம் அல்ல.

அதுமட்டுமின்றி, சராசரியாக 400-500 கிலோ மீட்டர் பயணித்து, பழக்கம் இல்லாத இடத்தில் தங்கி, விடுதிகளில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தேர்வு எழுதுவது மிகவும் கொடுமையானதாகும். அதிலும் தீபாவளி திருநாளுக்கு ஒரு சில நாட்கள் முன்பாக, முழு அளவில் தொடர்வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படாத சூழலில் தேர்வர்களை இவ்வாறு அலைக்கழிப்பது பெரும் தண்டனையாகும். இது தேர்வர்களின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மிகச்சிறப்பாக தேர்வுக்கு தயாரானவர்களால் கூட வெற்றி பெற முடியாமல் போகும். இது சம வாய்ப்பு கொள்கைக்கு எதிரானது.

விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. ஆனால், அதற்காக தேர்வர்களை அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று தேர்வெழுத வைப்பது நிச்சயமாக நல்ல சீர்திருத்தம் அல்ல. விரிவுரையாளர் போட்டித் தேர்வு ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட உள்ளது. தேர்வு முறையை தவறுகளே செய்ய முடியாத அளவுக்கு மாற்றினால், எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது.

அதேபோல், ஆன்லைன் தேர்வு முறையில் கோளாறுகள் இருந்தால், தேர்வர்களை கண்டம் விட்டு கண்டம் சென்று தேர்வு எழுத வைத்தால் கூட முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அணுகுமுறை முறைகேடுகள் இல்லாமல் போட்டித் தேர்வுகளை நடத்தும் திறன் அதற்கு இல்லை என்பதையே காட்டுகிறது. லாயத்தை பூட்டாமல் திறந்து வைத்து விட்டு, குதிரைகளை கட்டி வைப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல.

2018, 2019 ஆகிய ஆண்டுகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இராஜஸ்தான், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அணுகுமுறையை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டித்தன; சென்னை உயர் நீதிமன்றமும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தது. நீட் தேர்வுக்கான மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்த தமிழ்நாடு, விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வை மட்டும் வெளி மாவட்டங்களில் நடத்துவது எந்த வகையில் நியாயம்? சீர்திருத்தங்கள் சீரழிவுக்கு ஒருபோதும் வழிவகுத்துவிடக் கூடாது.

எனவே, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். ஆன்லைன் போட்டித் தேர்வு முறையை எந்த தவறும் செய்ய முடியாத அளவுக்கு வலுப்படுத்த வேண்டும். இவற்றை செய்வதற்கு போதிய அவகாசம் இல்லை என்றால், விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து விட்டு, குறைகளை சரி செய்த பிறகு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்