கடந்த 2 ஆண்டுகளாக திருச்சியில் பரபரப்பைக் கிளப்பும் சில முக்கியக் கொலை வழக்குகளை துப்பறிய முடியாமல் மாநகர காவல்துறை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதனால் காவல்துறை மீதிருக்கும் நம்பிக்கை சரிந்துவருவதாகச் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
துப்புத் துலக்க முடியாமல்…
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை, ஓராண்டிற்கு முன்பு நிகழ்ந்த பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா கொலை என முக்கியமான சில கொலை வழக்குகளில் துப்புத் துலக்க முடியாமல் திணறிய மாநகர போலீஸ் பிறகு அந்த வழக்குகளை வேறு அமைப்புகளிடம் விசாரிக்கச் சொல்லி ஒதுங்கிக்கொண்டது. இந்த நிலையில் கடந்த மே 5-ம் தேதி இரவு நடைபயிற்சி சென்ற உறையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதியழகன் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கிலும் இதுவரை துப்புத் துலக்க முடியாமல் திருச்சி மாநகர காவல்துறை கைபிசைந்து பரிதாபமாக நிற்கிறது.
வழக்கறிஞர் மதியழகன் பன்முகத் தன்மைக் கொண்டவர். எதிரெதிர் முகாமில் உள்ள அரசியல் இயக்கத்தினரிடமும் இன்முகத்துடன் பழக்கக் கூடியவர். நுகர்வோர் பிரச்சினைகளுக்காக ஓயாமல் குரல்கொடுத்தவர். பல்வேறு சமூக நல இயக்கங்களில் பங்கெடுத்தவர். திருச்சி மாநகர வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டியவர். விதிமீறலில் ஈடுபடும் மிகப்பெரிய பல அடுக்கு மாடி கட்டிட உரிமையாளர்களை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்தவர். தகவல் அறியும் உரிமைச் சட்ட போராளியாக திகழ்ந்தவர். அவரை கொடூரமாக கொலை செய்யக் காரணம் என்ன? என்பதை இதுவரை திருச்சி மாநகர போலீஸாரால் கண்டறிய முடியவில்லை.
ராமஜெயம் கொலையைப் போலவே…
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையைப் போலவே வழக்கறிஞர் மதியழகன் கொலையும் நிகழ்ந்துள்ளதால் இந்த பாணியில் கொலை செய்யும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளைப் பிடித்து விசாரித்தனர். ஆனால், போலீஸ் எதிர்பார்த்த எந்த விவரத்தையும் இவர்களிடமிருந்து பெற இயலவில்லை. இந்த நிலையில் திருச்சியின் பிரபல ரவுடியான பாம்புக்குட்டி நாகேந்திரனை பிடித்து விசாரித்தனர்.
பாம்புக்குட்டி நாகேந்திரனை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்களான மகேந்திரன், அரவானூர் விச்சு ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். இவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் இடையூறு செய்யும் நபர்களை சரிக்கட்டுவதற்காக பாம்புக்குட்டி நாகேந்திரனை ஜாமீனில் எடுத்து பராமரித்து வந்ததாக தெரிவித்தனர். கோடீஸ்வரர்களான இவர்கள் மீது வியாபாரிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்ததாக வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…
இந்த நிலையில் போலீஸின் துப்புத்துலக்கும் விதத்தில் அதிருப்தியடைந்த திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்துவிட்டு நீதிமன்றம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமாரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மதியழகன் கொலை விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் தரப்பில் கேட்டபோது, “இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் இதுவரை 96 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 33 ரவுடிகளை வளைத்துப் பிடித்து விசாரித்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையை கூடுதல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வையிட்டு வருகிறார். எனினும் துப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார்கள்.
சிபிஐ விசாரணை கோருவோம்…
வழக்கறிஞர் சங்க தலைவர் மார்ட்டின் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இதுவரை மாநகர போலீஸை நம்பியிருந்தோம். ஆனால், நீடிக்கும் இழுபறியைப் பார்க்கும்போது போலீஸ் தரப்பில் இந்த கொலை வழக்கில் துப்புதுலக்க போதிய ஆர்வம் காட்டவில்லை என எண்ணத் தோன்றுகிறது. மாநகர காவல் ஆணையர் இன்னும் 10 நாட்கள் அவகாசம் தாருங்கள் என கேட்டுள்ளார். அதனால் இறுதி வாய்ப்பாக இன்னும் 10 நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்.அப்படியும் போலீஸ் துப்புத் துலக்கவில்லையெனில் உயர் நீதிமன்றத்தை அணுகி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்போம்” என்றார்.
திருச்சியில் நீதிக்காக போராடும் வழக்கறிஞர்கள் இன்னமும் அச்சம் விலகாமல் உள்ளனர். இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் காவல்துறை அந்த அச்சத்தை போக்கி, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
அதை காவல் துறை செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago