ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக திமுகவினர் 9 பேர் சஸ்பெண்ட்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது ஆனால், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளர்களால் ஆலங்காயம், குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்குவாதம், மறியல், போன்ற சலசலப்புகள் ஏற்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை திமுகவின் போட்டி வேட்பாளர் சங்கீதா பாரி வெற்றி பெற்ற நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் கட்சி அறிவித்த வேட்பாளர் சத்யானந்தம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தலை வர் பதவியை கைப்பற்றினார். கடைசி நேரத்தில் அதிமுகவுடன் ஏற்பட்ட ரகசிய உடன்படிக்கையால் துணைத் தலைவர் பதவியை அதிமுக பிரமுகரும் சுயேட்சை யாக போட்டியிட்டு கவுன்சிலரான அருண் முரளி போட்டியின்றி தேர்வானார். குடியாத்தம் ஒன்றியத்தில் அதிமுக பிரமுகர் துணைத் தலைவர் பதவியை பிடித்தது திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம்.முனிவேல், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினரும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றிய சங்கீதாவின் கணவருமான பாரி ஆகியோரை கட்சியின் அடிப் படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல், குடியாத்தம் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக களம் இறங்கிய ரஞ்சித்குமார், குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் மனோஜ், சக்கரவர்த்தி மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோரை தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பலரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE