தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, முக்கியமான கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திட வேண்டும் என, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று )அக். 23) வெளியிட்ட அறிக்கை:
"நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அளித்து, பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த இந்த விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றபின் நிறைவேற்றாமல் விட்ட இன்னொரு முக்கியமான,
திமுக தேர்தல் வாக்குறுதி எண்: 468
முக்கியமான கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டுவந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திடச் செய்வோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசில், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்ததையும், அப்போது (ஜனவரி 2021-ல்) அவை என்ன விலையில் விற்கப்பட்டன என்பதையும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின், ஜூன் 2021-ல் கட்டுமானப் பொருட்களின் விலை எந்த அளவு உயர்ந்து, கட்டுமானத் தொழிலே பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும் நான் சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீது பேசும்போது குறிப்பிட்டிருந்தேன்.
அப்போது, முழுமையாகப் பேச எனக்கு வாய்ப்பு அளிக்காமல், பல குறுக்கீடுகள் செய்து, விலை கட்டுக்குள்தான் உள்ளது என்றும், தற்போது சிமெண்ட் விலை மூட்டைக்கு 50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டப்பேரவையில் பதில் அளித்தனர்.
ஆனால், தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை சுமாராக எவ்வளவு உயர்ந்துள்ளது என்று ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதேபோல, பெயிண்ட்டின் விலையும் தரத்துக்கு ஏற்ப 1 லிட்டர் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் இப்படி தாறுமாறாக உயர்ந்திருப்பதால், முழு ஊரடங்குக்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தொடருவதில் கட்டிட உரிமையாளர்களும் ஒப்பந்ததாரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் ஒரு சதுர அடி வீடு கட்டுவதற்கு தனியார் பொறியாளர்கள் சுமார் ரூ.2,300 வரை நிர்ணயம் செய்திருந்தனர். இது, இன்று குறைந்தபட்சம் 3,100 ரூபாய்க்கு மேல் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிமெண்ட் விலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் டெல்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திராவில் ரூ.370, தெலங்கானாவில் ரூ.360, கர்நாடகாவில் ரூ.380 என்ற விலையில்தான் விற்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.480 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் தமிழகத்தை விட, மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன.
ஜெயலலிதாவின் அரசில் சிமெண்ட் விலை உயர்ந்தபோது, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அம்மா சிமெண்ட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகத்துடன் ஒப்பிடும்போது, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும், தமிழகத்தில் சிமெண்ட் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.
ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்களின் வாழ்நாள் சாதனையாகக் கருதுவது, சொந்தமாக வீடு கட்டி வசிப்பதுதான். ஆனால், அவர்களின் சொந்த வீடு என்ற எண்ணம் தற்போது வெறும் கானல் நீராக போகக்கூடிய அளவில் கட்டுமானப் பொருட்களின் விலை, இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாத காலத்துக்குள் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், சொந்தமாக வீடு கட்டுவது மட்டுமல்ல, வீடுகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சிறு, சிறு ரிப்பேர் போன்றவற்றைக் கூட மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும், கட்டுமானத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள கொத்தனார்கள், ஆண்/பெண் வேலையாட்கள் (சித்தாள்), தச்சு வேலை செய்பவர்கள் என்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள்/ஓட்டுநர்கள், செங்கல் தயாரிப்பாளர்கள் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வோடு, டீசல் விலை உயர்வினால் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்த அரசு, இன்னும் விலைக் குறைப்பை நிறைவேற்றவில்லை.
தேர்தல் சமயத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி, சிமெண்ட், கம்பி, செங்கல், மணல் மற்றும் மரம் போன்ற முக்கியமான கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் இணைத்து, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago