அனைத்து அணைகளும் நிரம்பி, வடகிழக்குப் பருவ மழையும் அடுத்து தொடங்கிவிட்டால், மழை நீர் அனைத்தும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதோடு, மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
''அறமும் பொருளும் தழைக்கவும், இன்பம் எங்கும் பொங்கவும் முக்கியமாக விளங்குவது மழை. மழை இல்லாவிட்டால் பசும்புலலின்
தலையைக் கூடக் காண முடியாது என்பர். அதனால்தான், 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்று சிலப்பதிகாரத்தில் மழையைப் போற்றுகின்றார் இளங்கோவடிகள். திருவள்ளுவரும் 'வான் சிறப்பு' எனத் தனி அதிகாரம் கொடுத்து மழையைப் போற்றுகின்றார்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மழை அதிகமாகப் பெய்து, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதோடு மட்டுமல்லாமல், கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த சேதத்தைத் தடுக்கும் வகையிலும், தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்கு உதவும் வகையிலும் கல்லணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை என பல்வேறு அணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்து கொண்டிருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அளவுக்குத் தண்ணீர் நிரம்பி உள்ளதாகவும், குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாகவும், 120 அடி ஆழமுள்ள மேட்டூர் அணையில் 92 அடி வரை தற்போது தண்ணீர் உள்ள நிலையில, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கிட்டத்தட்ட 16,000 கன அடி என்ற அளவில் உள்ளதால், இந்த வாரத்திற்குள் அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று, பவானிசாகர் அணையில் 92 விழுக்காடு அளவுக்கு நீர் உள்ளதாகவும், பரம்பிக்குளம்-ஆழியாறு ஆகியவை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாகவும், சோலையாறு அணை தனது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாகவும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அளவுக்கு நீர் உள்ளதாகவும், தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதன் காரணமாக, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், தென் தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இது குறித்து, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து காணொலிக் காட்சி மூலம் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வரால் ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மறறும் கடலோர மாவட்டங்களில் இந்த மாதம் 22ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அனைத்து அணைகளும் நிரம்பி, வடகிழக்குப் பருவ மழையும் அடுத்து தொடங்கிவிட்டால், மழை நீர் அனைத்தும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதோடு, மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களையும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் அனுப்பி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், வெள்ளப் பெருக்கு ஏற்படின் பாதிப்புக்கு உள்ளாவோர்க்குத் தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது குறித்தும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago