பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை:
"ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
இதில், பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளை விட, மக்களைப் பட்டினி போடும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பது வெட்கக்கேடு.
» அக்.20 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
» தமிழகத்தில் தமிழர்க்கு மட்டுமே வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
2017 முதல் அடுத்த ஐந்து வருடங்களில், எடை குறைவான குழந்தைகள் பிறப்பை ஆண்டுக்கு 2 சதவிகிதமும், போதிய வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் இருப்பதை 25 சதவிகிதமும், பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதை ஆண்டுக்கு 3 சதவிகிதமும் குறைக்க மோடி அரசு நிர்ணயித்த இலக்கு தோல்வியில் முடிந்துள்ளது.
தேசிய ஊட்டச்சத்துக் குறைபாடு நீக்கத் திட்டத்தை தற்போதைய வேகத்தில் செயல்படுத்தினால், இந்த இலக்கை எட்ட முடியாது என்பது தான் உண்மை.
மோடி அரசின் மெத்தனப்போக்கால் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் 8.9 சதவிகிதமும், வளர்ச்சி இன்றி உயரம் குறைவாக இருப்பது 9.6 சதவிகிதமும், வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 4.8 சதவிகிதமும், குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை 11.7 சதவிகிதமும், பெண்கள் மத்தியில் ரத்த சோகை 13.8 சதவிகிதமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
2017 இல் 5 வயதுக்கும் குறைவான 10 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன. இதில், 68.2 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளதாக, 'டான்செட் சைல்ட் அண்ட் அடோலன்சன்ட் ஹெல்த்' என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாததால், இன்று உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 பெண்களில் ஒருவர் எடை குறைவாக உள்ளார். எடை குறைவாகக் குழந்தைகள் பிறப்பதற்கும் குறைப் பிரசவத்துக்கும் இதுவும் காரணம். குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதோடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago