வேலூர் அருகே அன்பூண்டி ஏரி நிரம்பியதால் தண்ணீரில் மூழ்கிய பொய்கை கால்நடை மருத்துவமனை: சாலையோரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

வேலூர் அருகே அன்பூண்டி ஏரி நிரம்பியதால் பொய்கை கால்நடை மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், மருத்துவமனை வளாகத்துக்குள் செல்ல முடியாத சூழலால் சாலையோரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெறும். இங்கு, வேலூர் மட்டுமில்லாமல் சித்தூர், பலமநேர் உள்ளிட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வாரந்தோறும் கால்நடை சந்தை நடைபெறுவதால் விவசாயிகள் நலன் கருதியில் பொய்கையில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

பொய்கை அருகேயுள்ள அன்பூண்டி ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு, பொய்கை, சத்தியமங்கலம், மோட்டூர், சோழமூர், கொத்தமங்கலம், திருமணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை மருத்துவ சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் அழைத்து வருகின்றனர். இங்கு, தினசரி 40 கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பொய்கை கால்நடை மருத்துவமனை வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. மருத்துவமனை வளாகம் முழுவதும் சுமார் 3 அடி உயரத்துக்கு தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் வடிந்தால் மட்டும் உள்ளே செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் உள்ளிட்டோர் சாலையோரத்தில் கால்நடைகளை நிறுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கால்நடையுடன் வந்த விவசாயி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் சாலையைவிட சுமார் 4 அடி பள்ளத்தில் கட்டியுள்ளனர். இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அன்பூண்டி ஏரி முழுமையாக நிரம்பியதால் மருத்துவ மனை வளாகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. மருத்துவமனைக்குள் இருக்கும் சினை ஊசி கேன் உள்ளிட்டவற்றை நாங்கள்தான் தண்ணீரில் நடந்து சென்று எடுத்து வந்து வைக்க வேண்டியுள்ளது. எனவே, ஏரியின் பாசன கால்வாய் ஆரம்பிக்கும் இடத்தில் ஷட்டர் அமைக்க வேண்டும். அல்லது மழைநீர் ஏரியில் கலப்பதற்காக அமைக்கப்பட்ட கால்வாயை தூர்வாருவதுடன் மோர்தானா கால்வாயுடன் இணைத்து விட வேண்டும்.மருத்துவமனையில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE