டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கை:
"நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக, பெட்ரோலியப் பொருட்கள் திகழ்கின்றன என்றாலும், அதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படுவது டீசல். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குவது டீசல் என்று சொன்னால் அது மிகையாகாது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது டீசல். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த டீசல் தற்போது அன்றாடம் உயர்த்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 'பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம்' என்ற கொள்கை முடிவுதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
இதன் விளைவாக, சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் 98 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, தேனி, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளான 7-5-2021 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் 15 காசுக்கும், டீசல் விலை 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 01 காசுக்கும், டீசல் விலை 98 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து மாதமே கடந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 86 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 12 ரூபாய் 27 காசாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசாகவும் உயர்ந்துள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அன்றாட டீசல் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு மதிப்பு கூட்டு வரி மூலமாக வரும் வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடியாக விளங்குகிறது. டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் தொடர் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலும் டீசலால் ஓடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால், அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.
அனைத்துப் பொருட்களின் விலை என்பது டீசல் விலை உயர்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அன்றாடம் ஏறிக்கொண்டே வரும் டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், இதர மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் விலையும் விஷம்போல் உயர்ந்துகொண்டே செல்கிறது.
தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கின்ற நிலையில், தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று, பாசனத்துக்காக டீசல் பம்பு செட்டுகளைப் பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய நிலையில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி டீசல் விலையைக் குறைப்பதுதான்.
எனவே, தமிழக முதல்வர் உயர்ந்துகொண்டே செல்லும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக் கொடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago