ஊரக உள்ளாட்சி தேர்தலில் சக்கர நாற்காலியில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரே ஒரு வாக்கில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற புறப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில பல இடங்களில் ஆச்சர்யப்பட வைத்த முடிவுகள் வெளியானது. மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள அகரம்சேரி கிராம ஊராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவு பல போராட்டங்களை கடந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ரஞ்சித் என்பவரை அடையாளம் காட்டியுள்ளது.
அகரம்சேரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ரஞ்சித் (32), பி.எஸ்.சி கணினி பட்டதாரி. ஆம்பூரில் கல்லூரி படிப்பை முடித்தவர் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனம்ஒன்றின் மேற்பார்வையாளராக பம்பரமாக சுழன்று வேலை செய்துவந்த ரஞ்சித்தின் வாழ்க்கையில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து சக்கர நாற்காலியில் அமர வைத்துவிட்டது. கடந்த3 ஆண்டுகளாக வீட்டில் முடங்கியிருந்த அவர் இனி மக்களுக்காக பணியாற்றப் போவதை எண்ணி பெருமை யுடன் உள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘`1996-ம் ஆண்டு அகரம்சேரி கிராம ஊராட்சியின் தலைவராக எனது அம்மா புவனேஸ்வரி இருந்தார். இதனால், எனக்கு அரசியல் ஈடுபாடு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. 2009-ம் ஆண்டு வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றினேன்.
இடைப்பட்ட காலத்தில் தனியார் நிறுவன பணியில் இருந்தேன். தென்னைமரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப் பட்டு நடக்க முடியாமல் போனது. முடியாமல் வீட்டில் முடங்கிப் போகாமல் இருக்க தேர்தலில் நிற்கலாம் என்றேன். வீட்டில் இருந்தவர்களும் எனக்கு துணையாக இருந்தனர்’’ என்றார்.
மொத்தம் 333 வாக்குகள் உள்ள வார்டில் ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் போட்டியில் இருந்தனர். மனம் தளராத ரஞ்சித், சக்கர நாற்காலியில் சென்று கட்டில் சின்னத்துக்கு வீடு, வீடாக வாக்குகளை சேகரித்தார். ரஞ்சித்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வேட்பாளர் அழகர் கடுமையான போட்டியை ஏற்படுத்தினார். தேர்தலில் 287 வாக்குகள் பதிவான நிலையில் இதில், ரஞ்சித் 106 வாக்குகளும், அழகர் 107 வாக்குகள் பெற்றார்.
ஒரே ஒரு வாக்கில் பின்தங்கி இருந்த ரஞ்சித்துக்கு 2 தபால் வாக்குகள் கடைசியாக கிடைத்ததில் மொத்தம் 108 வாக்குகளுடன் ஒரே ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பாராட்டி வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார்.
இனி ரஞ்சித்தின் சக்கர நாற்காலி மக்களுக்காக நான்கு புறமும் சுழலும் என்ற நிலையில் ‘‘ஒரே வாக்கில் வெற்றி பெற்றாலும் தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனது வார்டில் குடிநீர் வசதி, உயர்கோபுர மின் விளக்கு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்பேன்’’ என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ரஞ்சித்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago