திமுகவின்‌ சாயம்‌ வெளுத்துவிட்டது; மக்களவைத்‌ தேர்தலில் மரண அடி கொடுக்க மக்கள்‌ தயார்- ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

கெட்டிக்காரன்‌ புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல திமுகவின்‌ சாயம்‌ வெளுத்துவிட்டது என்றும் வருகின்ற மக்களவைத்‌ தேர்தலில்‌ திமுகவிற்கு மரண அடி கொடுக்க மக்கள்‌ தயாராகிவிட்டார்கள்‌ எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எனும்‌ மாபெரும்‌ மக்கள்‌ இயக்கம்‌ பொன்விழா கொண்டாடுகிறது.

அதிமுக 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப்‌ பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன்‌ விழா ஆண்டில்‌ அடியெடுத்து வைக்கிறது என்பதையும்‌, இந்தப்‌ பொன்‌ விழா ஆண்டில்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளராகப்‌ பணியாற்றும்‌ பெரும்‌ பாக்கியம்‌ எனக்கு இறைவனால்‌ அருளப்பட்டிருக்கிறது என்பதையும்‌ நன்றியுடனும்‌, மகிழ்ச்சியுடனும்‌ நினைவில்‌ கொள்கிறேன்‌.

கட்சி‌ பணியாற்றிய நேரத்தில்‌ உயிர்‌ நீத்த உத்தமத்‌ தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்‌. கட்சியை உயிரினும்‌ மேலாய்‌ மதித்து வாழும்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ இதயம்‌ கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத்‌ தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்வதில்‌ மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்‌.

அரசியல்‌ வரலாற்றை உற்று நோக்கிப்‌ பார்த்தால்‌, ஏதோ ஒரு கணக்கோடுதான்‌ அரசியல்‌ கட்சிகள்‌ தோன்றுகின்றன. ஆனால்‌, கணக்கு கேட்டதற்காக, ஊழலைத் தட்டிக்‌ கேட்டதற்காகப் பிறந்த ஒரே இயக்கம்‌ அதிமுக‌. அதனால்‌ தான்‌, தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில்‌ திண்டுக்கல்‌ மக்களவை இடைத்‌ தேர்தலைச்‌ சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தைப் படைத்தது.

இதன்‌ தொடர்ச்சியாக, 1977ஆம்‌ ஆண்டு தமிழ்‌நாடு சட்டப்பேரவைப்‌ பொதுத்‌ தேர்தலில்‌, ஊழலின்‌ ஊற்றுக்‌ கண்ணாக விளங்கிய திமுக ஆட்சி மக்களால்‌ அகற்றப்பட்டு, அதிமுக ஆட்சி மலர்ந்தது. புரட்சித்‌ தலைவரின்‌ ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும்‌ என்ற திமுகவின்‌ சதித்‌ திட்டம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆர்‌ உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால்‌ இருந்தது.

அவரின்‌ மறைவிற்குப்‌ பிறகு, சில துரோகிகளின்‌ துணையோடு கட்சியை அழிக்க நினைத்தார்‌ திமுக தலைவர்‌ கருணாநிதி. இதன்‌ விளைவு, இரட்டை இலை சின்னம்‌ முடக்கப்பட்டது. “சிங்கத்தின்‌ குகைக்குள்‌ பிளவு வந்தால்‌ சிறு நரிகள்‌ நாட்டாமையாகிவிடும்‌' என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன்‌ விளைவாக மக்கள்‌ விரோத ஆட்சி மீண்டும்‌ உருவானது. கட்சி‌ பிளவுபட்டதன்‌ காரணமாக திமுக ஆட்சியைப்‌ பிடித்தாலும்‌, சேவல்' சின்னத்தில்‌ தனியாகக் களம்‌ கண்டு, தனக்குள்ள மக்கள்‌ செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித்‌ தலைவரானார் ஜெயலலிதா‌. இதன்மூலம்‌ தமிழ்‌நாட்டின்‌ முதல்‌ பெண்‌ எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதனைத்‌ தொடர்ந்து பிளவுபட்ட கட்சி‌ மீண்டும்‌ ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம்‌ மீட்கப்பட்டது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன்‌ காரணமாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற பொதுத்‌ தேர்தலில்‌ அதிமுக மாபெரும்‌ வெற்றி பெற்று, ஜெயலலிதா‌ தமிழ்‌நாட்டின்‌ முதலமைச்சராக பொறுப்பேற்றுக்‌ கொண்டார்.

1991-ஆம்‌ ஆண்டு முதல்‌ 1996-ஆம்‌ ஆண்டு வரையிலான மாண்புமிகு அம்மா அவர்களின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌, தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக்‌ காவல்‌ நிலையங்களை உருவாக்கியது, உலகத்‌ தமிழ்‌ மாநாட்டினை நடத்திக்‌ காட்டியது, உலகத்‌ தரம்‌ வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்‌துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள்‌ தீட்டிச்‌ செயல்படுத்தப்பட்டன.

1996-ஆம்‌ ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்‌ காரணமாக நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற தேர்தலில்‌ கட்சியை அமோக வெற்றி பெறச்‌ செய்து, இரண்டாவது முறையாக தமிழ்‌நாட்டின்‌ முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

2001 முதல்‌ 2006 வரையிலான கால‌ கட்டத்தில்‌, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி நல்கிய அதிமுக‌ ஆட்சியை அகற்றுவது கடினம்‌என்று உணர்ந்த திமுக தலைவர்‌ கருணாநிதி2006-ஆம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்தலில்‌ மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச்‌ சந்தித்தார்‌. இருப்பினும்‌, திமுக தலைமையில்‌ மைனாரிட்டி ஆட்சிதான்‌ தமிழ்‌நாட்டில்‌ அமைக்கப்பட்டது.

2011-2016 ஆம்‌ ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2014-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற மக்களவைத்‌ தேர்தலில்‌, தமிழ்‌நாட்டில்‌ உள்ள 39 மக்களவைத்‌ தொகுதிகளில்‌, அதிமுக‌ 37 தொகுதிகளில்‌ வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில்‌ மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இதனைத்‌ தொடர்ந்து, 2016-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவைக்கான பொதுத்‌ தேர்தலில்‌, அதிமுக முதன்‌ முறையாக 234 தொகுதிகளிலும்‌ தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப்‌ பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும்‌ ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது.

2021-ஆம்‌ ஆண்டுக்கான தமிழ்‌நாடு சட்டப்‌ பேரவைப் பொதுத்‌ தேர்தலில்‌ அதிமுக மூன்றாவது முறையாக மீண்டும்‌ தொடர்ந்து ஆட்சியைப்‌ பிடிக்கும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த நேரத்தில்‌, எதிரணியினர்‌ அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல்‌ வாக்குறுதிகள்‌ காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப்‌ போய்விட்டது.

போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்துள்ள திமுக, எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள்‌ திமுகவிற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல்‌ திணறிக்‌ கொண்டிருக்கிறது. மொத்தத்தில்‌, விடியலை நோக்கி எனப்‌ பிரச்சாரம்‌ செய்துவிட்டு இன்று விடியா அரசாக காட்சி அளிக்கிறது. சட்டப்பேரவை‌ அடுத்த வாரிசின்‌ புகழ்பாடும்‌ மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, ஒரு குடும்பத்தின்‌ பிடியில்‌ திமுக சிக்கித்‌ தவித்துக்‌ கொண்டிருக்கிறது.

கெட்டிக்காரன்‌ புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல திமுகவின்‌ சாயம்‌ வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத்‌ தேர்தலில்‌ திமுகவிற்கு மரண அடி கொடுக்க மக்கள்‌ தயாராகிவிட்டார்கள்‌.‌

அதிமுக‌ தோன்றி 49 ஆண்டுகள்‌ நிறைவு பெற்று, 50-வது பொன்‌ விழா ஆண்டு தொடங்கும்‌ இப்பொன்னாளில்‌, ஜெயலலிதாவின்‌ வழிகாட்டுதலோடு, அவர்‌ வகுத்துக்‌ கொடுத்த பாதையில்‌ பயணித்து, மீண்டும்‌ அதிமுக ஆட்சி மலர ஒயாது உழைப்போம்‌ என நாம்‌ அனைவரும்‌ சூளுரைப்போம்‌''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்