டெல்லி, ஒடிசாவில் பட்டாசு விற்பனை மீதான தடையை நீக்க நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 16) வெளியிட்ட அறிக்கை:

"தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிக அளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும்தான் நம் நினைவுக்கு முதலில் வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவதுடன், தமிழகத்தின் பொருளாதாரமும் மேம்படுகிறது. ஆனால், தற்போது இந்தத் தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பாதிப்பைச் சந்தித்து வந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பட்டாசு உற்பத்தி தொடங்கிய நிலையில், கரோனா தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை சரிவைச் சந்தித்தது. பின்னர், கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் சூழ்நிலை உருவானது. இருப்பினும் சென்ற ஆண்டே ராஜஸ்தான் மாநில அரசு பட்டாசு விற்பனைக்கு அம்மாநிலத்தில் தடை விதித்தது. இதன் காரணமாக, பட்டாசுத் தொழில் சற்று பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும் நேரத்தில்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் தெரிவிக்கின்றனர்.

மேலும், பட்டாசுகளால் காற்றில் ஏற்படும் மாசு விரைவில் கரையக்கூடியது என்றும், 'நீரி' அமைப்பினுடைய வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பரிந்துரை ஆகியவற்றின்படிதான் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தயாரிக்கப்படுவதில்லை என்றும், மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுவதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இந்த நிலைமை தொடர்ந்தால் பட்டாசுத் தொழிலே அழியக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

'தனிமனிதனின் வாழ்வில் மட்டும் இன்ப ஒளி நிறைந்தால் போதாது. சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும். தீபாவளி என்பது ஏழைகளுக்கும் கைக்கெட்டும் கனியாகச் சிறந்து விளங்க வேண்டும்' என்ற தத்துவத்தைப் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்போரும் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முகத்தான், தமிழக முதல்வரும் டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், இதற்கு அந்த மாநிலங்கள் செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சிவகாசியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பதையும், இதன்மூலம் காற்று மாசு ஏற்படாது என்பதையும் தொலைபேசி மூலமோ அல்லது அமைச்சர்களை நேரில் அனுப்பியோ உண்மை நிலையை அந்தந்த மாநிலங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்