மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வெள்ளிக்கிழமை காலை ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாயத்தவரும் கலந்து கொண்டனர்.
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நடிகர் தாமு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அவரது தேசிய நினைவகத்தைப் பார்வையிட்டனர்.
அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறியதாவது:
”பேக்கரும்புவில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் மத்திய அரசால் விரிவாக்கம் செய்யப்படும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதில் இளைஞர்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் அறிவு சார் மையம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. விரைவில் மத்திய அரசு நினைவகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
யாழ்ப்பாணத்தில் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம் சார்பாக மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்துல் கலாம் கடந்த 2012 ஜனவரியில் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாகப் பயணம் சென்றார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கலாம் தனது கணித ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரநாத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். 2015 ஜூன் மாதம் இலங்கைக்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார். அதுவே அவரது கடைசி வெளிநாட்டுப் பயணமாகவும் அமைந்தது.
கலாம் மறைவுக்குப் பின்னர் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாமின் மார்பளவு சிலை இந்தியத் தூதரகம் சார்பில் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவிற்கு வெளியே கலாமிற்கு முதன்முறையாக நிறுவப்பட்ட சிலையாகும்.
கலாமின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் உள்ள கலாமின் சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago