விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:

"அளவற்ற பொருள்களால் நிறைந்து, வெளிநாட்டவரும் விரும்பத்தக்கதாய், அமைதி நிறைந்ததாய், விளைபொருள் மிகுதி உடையதாய் இருப்பதே சிறந்த நாடாகும் என்றார் வள்ளுவர். இப்படிப்பட்ட சிறப்பை ஒரு நாடு பெற வேண்டும் என்றால், அந்த நாட்டில் சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுவதும் மிகவும் அவசியம்.

இல்லையெனில், அந்த நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை தாண்டவமாடுவதோடு, அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

பண்டிகைக் காலம் என்பதாலும், தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக, செப்டம்பர் மாதத்தில் ஒரு கிலோ பெங்களூரு தக்காளி 20 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், நாட்டுத் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம், விளைச்சல் வரத்துக் குறைவு என்று சொல்லப்பட்டாலும், பண்டிகை மற்றும் திருமண நாட்களை முன்னிட்டு, காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், அவை கிடங்குகளில் பதுக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக அன்றாடம் சமையலுக்குத் தேவையான எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உளுத்தம் பருப்பின் விலை கிலோவுக்கு 22 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் வகைகளின் உயர்வும் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதர மளிகைப் பொருட்களான பூண்டு, புளி, கடுகு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

சில பகுதிகளில் இன்னும் கூடுதல் விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்போருக்கு இந்த விலைவாசி உயர்வு கூடுதல் சுமையைக் கொடுத்திருக்கிறது.

பொருட்களைப் பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் மாநில அரசின் கடமை. அப்போதுதான் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்கள் சிறப்பாக வாழமுடியும்.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்