கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 22 வயது பொறியியல் பட்டதாரி வெற்றி

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் லெட்சுமியூரைச் சேர்ந்த 22 வயது பொறியியல் பட்டதாரி ஸாருகலா வெற்றி பெற்றுள்ளார்.

இவர், கோயம்புத்தூர் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாவது ஆண்டில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து, ஸாருகலா கூறும்போது, “எனது தந்தை ரவி சுப்பிரமணியன் விவசாயம் செய்து வருகிறார். தாய் சாந்தி பூலாங்குளம் அரசுமேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். தம்பி பெயர் அழகுசந்துரு.

எங்கள் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து, எனதுதந்தை தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு வாகனம் மூலம் குடிநீர் வழங்கினார்.

வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஊராட்சித் தலைவரானால் அரசு மூலம் மக்களுக்கு கூடுதலாக சேவை செய்யமுடியும் என்பதால், தேர்தலில் போட்டியிடுகிறாயா என எனதுதந்தை கேட்டார். எனக்கும் ஆர்வம் இருந்ததால் போட்டியிட சம்மதித்தேன். மாற்றத்தை விரும்பிய மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததால் 796 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றேன்.

ஊராட்சியில் உள்ள அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுப்பேன். கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் சாதனை படைக்க தேவையான உதவிகளைச் செய்வேன். வெங்காடம்பட்டியை இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பது எனது லட்சியம். முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்ந்துகொண்டே, ஊராட்சித் தலைவர் பதவியின் மூலம் மக்கள் பணி செய்ய உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE