உள்ளாட்சித் தேர்தல்: நெருக்கடிகளுக்கு இடையில் பெற்ற வெற்றி; 3-வது பெரிய அரசியல் சக்தி பாமக: ராமதாஸ் பெருமிதம்

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் பாமக நெருக்கடிகளுக்கு இடையில் வெற்றி பெற்றதாகவும், தாங்கள் 3-வது பெரிய அரசியல் சக்தி என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 47க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை பாமக கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பாமகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தல்கள்தான் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவார்கள் என்பதால், அதற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாமக தனித்துப் போட்டியிட்டது. பாமகவின் வலிமையையும், பாமகவினர் ஆற்றிய களப் பணிகளையும் ஒப்பிடும்போது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்ட வெற்றி

ஆனாலும், பாமகவின் வெற்றி எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளுக்குப் பணத்தை வாரி இறைத்தன. வேட்பு மனுத் தாக்கலில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துக் கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்குப் பணிந்தது. பாமக வென்றிருக்க வேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. பாமக இப்போது வெற்றி பெற்ற இடங்களில் பலவற்றிலும்கூட முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்தன. அதை எதிர்த்து மாவட்டத் தேர்தல் அதிகாரி முதல் மாநிலத் தேர்தல் ஆணையர் வரை பல்வேறு நிலைகளிலும் போராடித்தான் முடிவுகளை அறிவிக்க வைக்க முடிந்தது. இவை அனைத்துமே போராடிப் பெற்ற வெற்றிகள் ஆகும்.

அந்த வகையில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக பெற்றுள்ள வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது ஆகும். பாமக தனித்துப் போட்டியிட்டபோதிலும், ஆளும் திமுக, ஆட்சி செய்த அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாமகவை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியைப் பெற முடியாமல் போனவர்களும் நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் பொதுமக்களின் ஒரே தேர்வு பாமகதான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்