"கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்றுள்ளோம் என்று அவர் பெருமித உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி கடந்த ஐந்து மாத திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது கரோனா என்ற கொடிய தொற்று பரவிய காலமாக இருந்தது. ஒருபக்கம் மருத்துவ நெருக்கடி - இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலகட்டத்தில் திமுக அரசு அமைந்தது. கரோனாவை வென்றோம். பரவலைக் கட்டுப்படுத்தினோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி உதவி அளித்தோம். அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தோம்.
ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போயிருக்கிறது கடந்தகால அதிமுக அரசு. அதற்காக நிதிநெருக்கடியைக் காரணமாகக் காட்டி தப்பிக்கப் பார்க்க வில்லை நாங்கள்.
மிகக்கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம். நாள்தோறும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் வெற்றி!
நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட, இந்த ஐந்து மாத காலத்தில் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது என்பதை நான் சொல்லி வந்தேன். இது ஏதோ எனது அனுமானம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாட்டுக்குக் காட்டி இருக்கிறது.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது.
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன். ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, ஐந்து மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், அனைத்துக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும். தமிழினத் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே நாங்கள் என்பதை உங்களது உழைப்பால் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுகூட பழைய மொழிதான். இந்தப் படை ஒன்றே வெல்லும் படை என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்டுள்ளீர்கள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வருகிறது; இனியும் நிறைவேற்றித்தரப் போகிறது. இந்தத் திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது. எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே; அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தா வகையில் அமையட்டும் என்று கேட்டுக் கொண்டு, மக்கள் தொண்டு ஒன்றே நமது செயல்பாடுகள் என்று மக்கள் கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம்! மக்களைக் காப்போம்!"
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago