அதிமுகவில் தொகுதி மாற விரும்பிய அமைச்சர்களை மீண்டும், அதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதால், அவர்கள் சீட் கிடைக்கும் வாய்ப்பிருந்தும் மகிழ்ச்சியில்லாமல் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை இருந்ததால், அதிமுகவில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர் நிர்வாகிகளைக் கூட வேட்பாளராக அறிவித்தனர். அதில் வெற்றிபெற்ற பலருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அவர்களில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காத, தொகுதி மாறி போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் ஒதுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அவர்களை கடந்த முறை வெற்றிபெற்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிகளில் ஈடுபட, அதிமுக மேலிடம் அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த முறை எவ்வித அலையும் வீசாததால், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் வெற்றிபெறுவது கடினம். இதனால் அவர்களில் பலர், இந்த முறை தங்களுடைய சொந்த தொகுதிகளுக்கு மாற விரும்பி, கட்சி மேலிடத்துக்கு நெருக்கமான இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவர்களும், சொந்த தொகுதிகளை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதிமுக மேலிடம் சர்ச்சைகளில் சிக்காத அமைச்சர்களை கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும், அதனால், பல அமைச்சர்கள் மீண்டும் சீட் கிடைப்பது உறுதியானாலும் சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பின்றி கவலையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தற்போது அமைச்சராக இருக்கும் ஆர்.பி. உதயகுமார், மதுரையை மையமாக வைத்தே அரசியல் செய்து வந்தார். ஆனால், இவரை கடந்தமுறை சாத்தூரில் நிற்க வைத்தனர். சம்பந்தமே இல்லாத தொகுதியில் போட்டியிட்டாலும் திமுக எதிர்ப்பு அலையில் அவர் வெற்றி பெற்றார். இந்த முறை இவர் தொகுதி மாற விரும்பினார்.
அதுபோல, கடந்த தேர்தலில் அமைச்சர் செல்லுர் கே. ராஜூ வடக்கு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு கிராமங்கள் அதிகமுள்ள மேற்குத் தொகுதி வழங்கப்பட்டது. அவர் வெற்றியும் பெற்றார். இந்த முறை அவரும் தொகுதி மாற விரும்பினார். இவர்களைப் போல பல அமைச்சர்கள், எந்தவித எதிர்ப்பு அலைகளும் இல்லாத நேரத்தில் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதியில் போட்டியிட தயங்கி தொகுதி மாற நினைத்தனர்.
ஆனால், இவர்களை அதே தொகுதியில் போட்டியிட மேலிடம் கட்டளையிட்டுள்ளது. அதனால், சீட் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாக இருந்தாலும் அமைச்சர்கள் சிலர் எப்படி தொகுதி மக்களை எதிர்கொள்வது என்று கவலையுடன்தான் உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago