'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டம்; தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

'வருமுன் காப்போம்' திட்டம் தமிழகம் முழுவதும் நாளை 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் தொடங்கப்படுகிறது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (அக். 11) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் கருணாநிதியால் 'வருமுன் காப்போம்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன்பெற்றனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அத்திட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்தார்கள்.

இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்தை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவ வசதியுடன் கடந்த வாரம் சேலத்தில் செப். 29 அன்று தமிழக முதல்வரால் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டு ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் 50 இடங்களில் நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடைபெற உள்ளது.

அந்த முகாம்களில் 17 அரங்குகளில் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மருத்துவத்துறையின் செயல்பாடுகள், விழிப்புணர்வு என்கிற வகையில் 20-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கோவிட் -19 தடுப்பூசியும் வழங்கப்பட இருக்கிறது. மேல் சிகிச்சைகள் தேவைப்படுவோர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துக்கான அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்படவிருக்கின்றன.

கோவாக்சின் தடுப்பூசிகள் 6 லட்சம் பேரும், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 19 லட்சம் பேரும் என மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருந்தனர். தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நேற்று 11 லட்சத்து 2 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் தடுப்பூசி மையங்கள் செயல்படும்.

மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமானங்களை மருத்துவக் கல்லூரி இயக்குநர் தலைமையில் டெல்லிக்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவற்றில் நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு வரச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

தமிழக மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லவில்லை. தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நேற்று முன்தினம் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 64 சதவிகிதத்தினர். நேற்றைக்கு 5-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22 லட்சத்து 50 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தியதன் விளைவால் 3 சதவிகிதம் உயர்ந்து 67 சதவிகிதமாக உள்ளது.

தினந்தோறும் தடுப்பூசிகள் போடப்போட சதவிகிதம் என்பது உயரும். தடுப்பூசிகள் வர வேண்டியிருக்கிறது. தடுப்பூசிகள் வருவதற்கு ஏற்றாற்போல் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்ட 1,800 பேரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆதரவற்றோரைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து இரவில் மட்டும் மெரினா கடற்கரையில் தங்கிவிட்டு, பகலில் வியாபாரத்துக்காக வெளியில் சென்றுவிடும் நரிக்குறவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விடியற்காலை சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 1,777 பேருக்கும், வீடு இல்லாமல் இருக்கும் 2,247 பேருக்கும், 2 லட்சத்து 20 ஆயிரத்து 48 மாற்றுத்திறனாளிகளுக்கும், 3 லட்சத்து 92 ஆயிரத்து 895 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 4 லட்சத்து 84 ஆயிரத்து 918 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்குக் கூடுதலான வகையில் தடுப்பூசிகள் அனுப்பி, மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் கூடுதலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் தமிழகத்துக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருந்து வருகிறார். வாராவாரம் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தடுப்பூசி முகாமில் 5 இடங்களுக்கு நேரடியாகச் சென்றும், அதற்கு முந்தைய வாரம் 3 இடங்களுக்குச் சென்றும், நேற்று இரண்டு இடங்களுக்கு நேரடியாகச் சென்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்தின் முதல்வரும், வாராவாரம் தடுப்பூசி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தின் முதல்வர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் இவற்றுக்காகத்தான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகே நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. கடந்த 10 ஆண்டுகளாக அம்முகாம்கள் நடைபெறவில்லை. பட்ஜெட்டில் அறிவித்தவாறு மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் இனி நடத்தப்பட இருக்கின்றன".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்