புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி, 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்று, புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள், அரசியலமைப்பு சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர், இதுசம்பந்தமான அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக இன்று (அக்.11) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார்.
கொள்கை அடிப்படையில் அமைச்சரவை முடிவின் கீழ் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது எனவும் வாதிட்டார். இதற்கு கட்சி பேதம் இல்லாமல் அத்தனை எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை எனவும், இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்பதால், இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.
புதுச்சேரி அரசு மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சந்திரசேகர் மற்றும் மாலா ஆகியோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது எனத் தெரிவித்தனர்.
துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் ஒப்புதலுடன்தான் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்றது ஏன் என, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிப் பரிந்துரைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago