நீலகிரி மாவட்டம் தேவாலா வனப்பகுதியில் தாயிடம் பிரிந்த குட்டி யானை, வனக்காவலர்களை பின்தொடர்ந்ததுடன், அவர்களை விட்டுச் செல்ல முடியாது என்று அடம் பிடித்தது. குட்டி யானையின் சுட்டித்தனத்தை வனக்காவலர்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா கைதக்கொல்லி வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 7 யானைகளைக் கொண்ட யானைக் கூட்டம் உணவு தேடி வந்தது. பிறந்து ஒரு மாதம்கூட முழுமையாகாத குட்டியும், அக்கூட்டத்தில் இருந்தது. அந்தப் பகுதியில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்க குழியில் தவறி விழுந்த குட்டி யானையை, மற்ற யானைகள் போராடிப் பார்த்தும் மீட்க முடியவில்லை.
வழக்கத்துக்கு மாறாக யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள்,வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். கூடலூர் வனஅலுவலர் (பொ) வெங்கடேஷ்பிரபு உத்தரவின்பேரில் வனச்சரகர் (பொ) பிரசாத், வனவர்கள் ஜார்ஜ், பிரவீன்சன், விஜயகுமாரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். குழிக்குள் விழுந்துமேலே வரமுடியாமல் தவித்த குட்டியானையை மீட்டு, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீராகாரம் அளித்தனர்.
இதையடுத்து குட்டி யானையை, யானைக்கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். யானைக்கூட்டத்தின் அருகே குட்டியை விட்டுவிட்டு, வனத்துறையினர் திரும்பியபோது, அந்தக் குட்டியும் இவர்களுடனேயே திரும்பி ஓடி வந்துள்ளது.
இதைக் கண்ட யானைக் கூட்டம், வனத்துறையினரை விரட்டியது. ஒருகட்டத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்களை முழுமையாக நம்பிய அந்த குட்டி யானை, அவர்களை விட்டுச்செல்லாமல் குறும்புத்தனமாக முரண்டு பிடித்தது. குட்டியின் மேல் மனித வாடை படாத வகையில் பார்த்துக்கொண்ட அந்த மீட்புக் குழுவினர், மறுநாள் இரவு அந்தக் குட்டியை கூட்டத்துடன் சேர்த்துவிட்டு வீடு திரும்பினர். குட்டி யானையின் சுட்டித்தனத்தை வீடியோவாக தங்கள் செல்போன்களில் வன ஊழியர்கள் பதிவுசெய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அறக்கட்டளை அறங்காவலர் வி.சிவதாஸ் கூறும்போது, ‘‘வனத்தில் தாயைவிட்டு சில நேரங்களில் குட்டிகள் பிரிவது உண்டு. ஒரு சில குட்டிகள் தாயுடன் மீண்டும் சேரலாம் அல்லது சேராமல் போகவும் நேரிடலாம். காட்டில் தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள் வேட்டை விலங்குகளுக்கு இரையாகும், ஒரு வேளை மனிதர்கள் கண்ணில் தென்பட்டால் வனத்துறை கட்டுப்பாட்டில் வளர்ப்பு யானைகளாக மாற்றப்படும்.
முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு அப்படி வந்தவைதான் மசினி, பொம்மி, ரகு போன்ற யானைகள். இன்றைக்கு நம்மிடையே கும்கிகளாக இருக்கும் பெரும்பாலான யானைகள் ஒரு காலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானைகள்தான். எனவேதான் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று கண்டறியப்பட்டால், எப்பாடுபட்டேனும் அதை மீண்டும் யானை கூட்டத்துடன் சேர்க்கும் பணியைவனத் துறை ஒரு மாதம் வரை மேற்கொள்கிறது. முடியாத பட்சத்தில்தான் முகாமுக்கு கொண்டு வரப்படுகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago