விதிகளைப் பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை: தமிழக வேளாண்மைத் துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மாநிலம் முழுவதும் 3,391 உரக்கடைகளில் ஆய்வு நடந்ததாகவும், விதிகளைப் பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் சாதகமான பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சம்பா நெல் நடவுப் பணிகள் 13.168 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு சம்பா நடவுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் உரத் தேவை அதிகரித்துள்ளது.

உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. விவசாயிகள் உரக் கண்காணிப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு உரம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 08.10.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் வேளாண்மைத் துறையினரால் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனையக் கருவியின் வாயிலாகப் பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் முதலான பணிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக் கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகையைப் பராமரிக்காத 6 உரக் கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத, கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மானிய உரங்களை விற்பனை முனையக் கருவியில் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யாத ஒரு உரக்கடை மீது mFMS குறியீட்டு எண்ணைத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளின்படி உரங்களை, விற்பனை முனையக் கருவியின் மூலம் விவசாயியின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயம் செய்த விற்பனை விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றாமல் உர விற்பனை செய்யும் உரக்கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்குத் தேவையான உரங்கள் தங்கு தடையின்றிக் கிடைத்திட உரக்கடைகள் வேளாண்மைத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது’’.

இவ்வாறு வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்