பட்டியலினத்தவருக்கு வார்டு ஒதுக்கீடு செய்வதில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் மீது ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக். 9) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப் போக்குடனும், தான்தோன்றித்தனமாகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகச் செயல்பட்டு வருகிறது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக முடிவுகளை எடுத்து பொறுப்பற்ற முறையில் அமல்படுத்தி வருகிறது.
இதனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு தவறான எண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகச் சிறு கருத்து கூட ஆளும் அரசுடன் பகிர்ந்து கொள்ளாமல் நடப்பது வியப்பாக உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க முன்னாள் ஆளுநர் கிரண்பேடியின் ஆலோசனையின்படி செயல்படுவதாகத் தெரிகிறது.
முன்னாள் ஆளுநர் கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973 பிரிவு எண் 9 இட ஒதுக்கீடு பற்றி விளக்கமாகக் கூறியுள்ளது.
அதில் உட்பிரிவு 5-ல் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவிக்கான இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 2006-ல் புதுச்சேரி நகராட்சிப் பெண்களுக்கும், உழவர்கரை நகராட்சி ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அதுபோல் பிற நகராட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், தற்போது சுழற்சி முறையில் மாற்றம் செய்யாமல் 2006-ல் ஒதுக்கப்பட்டபடியே புதுச்சேரி நகராட்சி மீண்டும் பெண்களுக்கு என்றும், மற்ற நகராட்சிகளும் 2006-ல் ஒதுக்கப்பட்டது போன்றே ஒதுக்கியுள்ளது தவறான ஒன்றாகும். இது உள்ளாட்சித் தேர்தல் சட்ட விதிகளுக்குப் புறம்பானது.
2006 மக்கள்தொகையின்படி புதுச்சேரி நகராட்சியில் 42 வார்டுகள் இருந்ததில் 7 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது புதுச்சேரி நகராட்சியில் 33 வார்டுகளாகக் குறைக்கப்பட்டு அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பட்டியலினத்தவருக்கு 6 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 4 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவர்களின் உரிமையைப் பறிக்கும் அதிகாரத்தை மாநிலத் தேர்தல் ஆணையருக்கு யார் கொடுத்தார்கள்? இது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம். இதன் மீது ஆளுநரும், முதல்வரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாகத் துணைநிலை ஆளுநருக்கு அதிமுக சார்பில் கடிதம் வழங்க இருக்கிறோம்.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் நடத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பது தவறு. முதல்வர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.’’
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago