சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்டப் பணிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகள் மற்றும் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பகுதியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தைக் குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கருணாநிதியின் தலைமையிலான அரசால் 2007-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ.), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ.), என மொத்தம் 118.9 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகளை (Central Square) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் கீழ் வெளியூர் ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், மாநகரப் போக்குவரத்து மற்றும் இதரப் பொதுப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்தல், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே 2 சுரங்க நடைபாதைகள், நிலத்தடி வாகன நிறுத்தங்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடம், அருகில் உள்ள ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுக்கூடம், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கிடையே உள்ள பகுதியை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
மத்திய சதுக்கத்தை சிங்காரச் சென்னையின் மணிமகுடமாக விளங்கும் வகையில், நேர்த்தியாகப் பணிகளைக் குறித்த காலத்தில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பகுதிக்குச் சென்று, கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள குளோவர் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாறிச் செல்வதற்கும், அப்பகுதியில் காத்திருக்கும்போது பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் போரூர், ராமச்சந்திரா மருந்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டு வரும் உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையக் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறும், கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago