கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 08) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய அரசுத் துறைப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசுப் பணியாளர்களில் வெறும் 17.50 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதுதான் பேரதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஆகும். இது இந்தியாவில் சமூக நீதி தழைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.
பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசில் ஒட்டுமொத்தமாக 53 துறைகள் உள்ள நிலையில், 19 அமைச்சகங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
» கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணி: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
» ஐந்தாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
அத்துறைகளில் பட்டியலினத்தவருக்கு 15.34%, பழங்குடியினருக்கு 6.18%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17.50% பிரதிநிதித்துவம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதிநிதித்துவம் என்பது பொதுப்போட்டிப் பிரிவில் வெற்றி பெற்று, மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியது ஆகும். அதன்படி, எந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காதது உறுதியாகிறது.
மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1990-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை முறியடித்து, 1992-93ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வந்தது.
சுமார் 30 ஆண்டுகளாக ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசால் இன்னும் முழுமையாக நனவாக்க முடியவில்லை. மத்திய அரசின் 19 அமைச்சகங்களில் 17.50% பணியாளர்கள் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் என்று கூறுவது கூட, பொதுப்போட்டிப் பிரிவில் வெற்றி பெற்றவர்களையும் சேர்த்துதான்.
பொதுப் போட்டிக்கான 50.50% இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7.5% இடங்களைக் கைப்பற்றியதாக கணக்கில் கொண்டாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% ஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய சமூக அநீதி.
1990-களின் தொடக்கத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட பத்தாண்டுகள் வரையிலும்கூட இட ஒதுக்கீட்டின் அளவு 5 விழுக்காட்டைத் தாண்டவில்லை. ஆனால், ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் சராசரியாக 4% என்ற அளவில் இருந்தது.
ஆனாலும், ஓபிசி பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்காததற்காக கூறப்பட்ட காரணம்... இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் உயர்வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்; இனிவரும் ஆண்டுகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பதுதான்.
அரசு ஊழியர்களின் சராசரி பணிக்காலம் 30 ஆண்டுகள்தான். ஆனால், ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் பொதுப்போட்டிப் பிரிவில் சேர்ந்தவர்களையும் சேர்த்து ஓபிசி பிரதிநிதித்துவம் மூன்றில் இரு பங்கைக்கூட எட்டவில்லை என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 30 ஆண்டுகளாக முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு அந்தப் பிரிவினருக்கு முழுமையாக கிடைக்காததற்குக் காரணம், அந்த வகுப்பில் தகுதி படைத்தவர்கள் இல்லை என்பதல்ல. அவர்களில் திறமையும், தகுதியும் படைத்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.
ஆனால், கிரீமிலேயர் எனப்படும் கருவியைப் பயன்படுத்தி, சமூக நீதி சிதைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் ஆகும். தகுதியான ஓபிசி வகுப்பினரை, கிரீமிலேயர் என்று முத்திரை குத்தி வேலைவாய்ப்பை மறுக்கும் மத்திய அரசு நிறுவனங்கள், அவ்வாறு ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படாத இடங்களை பொதுப்பிரிவில் சேர்த்து உயர் வகுப்பினரைக் கொண்டு நிரப்பிக் கொள்கின்றன.
ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு முப்பதாண்டுகள் ஆகியும் உயர்வகுப்பினரே 61% இடங்களை ஆக்கிரமித்திருப்பதற்கு இதுவே காரணம்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள பணியாளர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? அவர்களுக்கான 27% இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பணியிடங்களைப் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வு மூலம் அவற்றை ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாகப் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி கிடைக்கப் பெரும் தடையாக இருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட எந்தச் சட்டத்திலும் இல்லாமல் திணிக்கப்பட்ட கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago