பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தியகம் திறப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் இன்று திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் பிளாண்ட் உள்ளது. தற்போது மத்திய அரசின் சார்பில் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய கூடம் நிறுவப்பட்டது.

இதனைப் பயன்பாட்டுக்கு இன்று (அக். 07) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் திறந்து வைத்தாா். நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.ரவிக்குமார், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பழநிமாணிக்கம் கூறியாதவது:

"தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் இங்குள்ள மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி, உயிரிழப்புகளின் சதவீதத்தைக் குறைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி, தன்னார்வ அமைப்புகள், அரசு நிதியைக் கொண்டு 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் திறக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது.

இங்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதால், அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தேவையான அளவு உள்ளது.

தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து 25 வென்டிலேட்டர் அமைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும், அதனைத் தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.

கரோனா தடுப்பூசியைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு கூடுதல் தடுப்பூசியைத் தேவைக்கு ஏற்ப வழங்கினால் நன்றாக இருக்கும்".

இவ்வாறு பழநிமாணிக்கம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE