திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களிக்கும் நேரம் மாலை 5.45 மணிக்கே முடிந்து விட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதைக் கண்டித்து 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கான முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு 9 மாவட்ட கவுன்சிலர், 83 ஒன்றிய கவுன்சிலர், 137 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 1,188 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்களிக்க வந்தவர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. ஒவ்வொருவருக்கும் கையுறை, கிருமிநாசினி வழங்கப்பட்ட பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 4 ஒன்றியப் பகுதிகளில் 942 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 163 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
அங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள், வீடியோகிராபர்கள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு தொடக்கத்தில் மந்தமாகவே இருந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர் கூட்டம் குறைவாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 8.16 சதவீதம், காலை 11 மணி நிலவரப்படி 13.70 சதவீதம் வாக்குப் பதிவாகியிருந்தது. திருப்பத்தூரில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 11 மணி வரை சாரல் மழை பெய்ததாலும், இன்று மகாளய அமாவாசை தினம், நவராத்திரி கொலு தொடக்க நாள் என்பதாலும் காலையில் வாக்குப்பதிவு மந்தமாகக் காணப்பட்டது.
பகல் 12 மணிக்கு மேல் சாரல் மழை முடிவுக்கு வந்ததால் வாக்குப்பதிவு சற்று விறுவிறுப்படைந்தது. அதன்படி பகல் 1 மணிக்கு 25.05 சதவீதமும், மாலை 3 மணிக்கு 41.24 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 57.5 சதவீதம் என வாக்குப்பதிவானது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டிருந்ததால் மாலை 3 மணிக்கு மேல் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
மாலை 5.45 மணிக்கு மேலே வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதால், வாக்காளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இடையே கடுமையான கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் போராட்டம் வெடித்தது.
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி அசோக்நகர் வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கவில்லை. இந்நிலையில், இன்று மாலை திடீரென 5.45-க்கு வாக்குச்சாவடிக் கதவுகள் மூடப்பட்டன.
அப்போது வாக்களிக்க ஆர்வமாக வெளியில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். எங்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் கடந்து விட்டதால் அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனால், அதிருப்தி அடையந்த 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது.
அதேபோல, வெங்களாபுரம் ஊராட்சி, புத்தாகரம் ஊராட்சி, அத்தனாவூர், ஊராட்சி, பா.முத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடிகள் மாலை 5.45-க்கே மூடப்பட்டன. அதன் பிறகு வந்த யாரையும் வாக்களிக்க அனுமதிக்காததால் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பணியில் 850 சுகாதாரப் பணியாளர்கள், 110 மண்டல அலுவலர்கள் என மொத்தம் 6,313 அரசு அலுவலர்கள் முதல்கட்டத் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளதால் அதுவரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் அங்கு தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago