100 நாள் வேலையின் அருமை பெருமையை நேரில் வந்து பார்க்கவும்: அண்ணாமலை, சீமானுக்கு விருதுநகர் எம்.பி. அழைப்பு

By இ.மணிகண்டன்

கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அருமையை நேரில் வந்து பார்க்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், உத்தரப் பிரசேதத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 2 நாள்களாக வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வர் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரசேதத்தில் யோகி அரசு தொடர்ந்து ஜனநாயக விரோதப் போக்கை கையில் எடுத்து வருகிறது. இதை காங்கிரஸ் வண்மையாகக் கண்டிக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2007ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தால் கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஏழ்மை, வறுமையால் மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் இத்திட்டத்தின் அருமை பெருமையை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் வந்து பார்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

லட்சக்கணக்கான குடும்பங்களைக் காக்கும் இத்திட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

தொடர்ந்து சமையல் கேஸ் விலை உயர்ந்து வருகிறது. இன்றும் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை ரூ.100ஆக உயர்த்தியதுபோல் சமையல் கேஸ் விலையை ரூ.ஆயிரம் ஆக்கிவிடுவார் மோடி. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு 2024ல் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

பட்டாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்று 2018ல் போட்ட உத்தரவை நீதிமன்றம் கடந்த மார்ச் 19ல் நீக்கியது. ஆனால், பழைய உத்தரவை மேற்கோள்காட்டி சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். டெல்லியில் மாசு ஏற்பட காரணமான 26 காரணிகளில் பட்டாசு 26வது இடத்தில் உள்ளது.

முதல் 6 காரணிகளால்தான் 90 சதவிகித மாசு ஏற்படுகிறது. அவ்வாறு இருக்க பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையாதாக இல்லை.

பசுமை பட்டாசு தயாரிப்பதில் பெசோவுக்கும் நீரி அமைப்புக்கும் புரிதல் இல்லாமல் உள்ளது. சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். பட்டாசுக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிவகாசிக்கு நேரில் வந்து பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களின் நிலையையும் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE