விழுப்புரம் மாவட்டத்தில் தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 2000 வாக்களர்களும், பொன்னங்குப்பம் கிராமத்தில் சுமார் 1500 வாக்களர்களும் உள்ளனர்.

பெரும்பான்மை வாக்காளர்கள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் கடந்த சில தேர்தலாக ஏலம் விடப்பட்டு தேர்வு செய்யப்படுகிறனர். தேர்வு செய்பவர் மட்டும் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஏல முறையை தடுக்க முயற்சித்தும் உரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாததால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை.

இந்நிலையில் பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள 7,8,9 உறுப்பினர் பதவிக்கு சிலர் மனு தாக்கல் செய்து, பின்னர் திரும்ப பெற்றதால், அப்பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. மேலும் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்ட பூத் சிலிப்பை யாரும் பெறவில்லை.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன் அக்கிராமமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியர் ராஜன் தலைமையிலான சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று பொன்னங்குப்பம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பிலும், துத்திப்பட்டு கிராமமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணிவரை 7 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு 6.90 சதவீதமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE