அ.தி.மு.க, தி.மு.க, ம.ந.கூ எந்தப்பக்கம் சாய்வது?: திரிசங்கு நிலையில் த.மா.கா தலைவர்கள்

By கா.சு.வேலாயுதன்

2001 ஆம் ஆண்டின் திரிசங்கு நிலையில் காங்கிரஸ் இருந்தது போல் தற்போது தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தி.மு.கவில் என்றால் காங்கிரஸூடன் டீலிங் வைத்து 23 சீட்டுகளுக்கும், மக்கள் நலக் கூட்டணியில் என்றால் தனித்து 50 சீட்டுகளுக்கும் அரசியல் பேரம் நடந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கிறார்கள் கதர்ச் சட்டைகள். எப்படி?

2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது மூப்பனார் தலைமையிலான த.மா.கா. தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த முறை நாங்கள் மட்டும் கூட்டணி அமைப்பதில் பெரிய அளவில் காங்கிரஸ் உணர்வாளர்களின் ஓட்டு வந்துவிடாது. எனவே காங்கிரஸையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். காங்கிரஸை சேர்க்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அ.தி.மு.க, ‘எங்களுடைய கூட்டணி உங்களுடன்தான். உங்களுக்கு கொடுக்கும் சீட்டை வேண்டுமானால் காங்கிரஸிற்கு பிரித்துக் கொடுங்கள்!’ என்று கூறிவிட்டது.

ஆக, மூப்பனார் அப்போது காங்கிரஸிற்கும் சேர்த்தே சீட் பேரம் பேசினார். 40, 42, 45 என பேசி கடைசியில் 47 சீட்டை கொடுத்தது அ.தி.மு.க. அதில் 12 தொகுதிகளைகாங்கிரஸிற்கு கொடுத்து விட்டு, 35 சீட்டுகளில் த.மா.கா வேட்பாளர்களை அறிவித்தார் மூப்பனார். அப்போது காங்கிரஸூடன் த.மா.கா கூட்டணி வைத்துக் கொண்டதே ஒழிய அ.தி.மு.க இல்லை. வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் வாசன் உட்பட மூத்த தலைவர்கள் அனைவருமே அ.தி.மு.கவுடனே கூட்டணி என்ற முடிவில் இருந்தனர். சீனியர் தலைவர் ஒருவரே அதற்காக பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டார்.

கடைசி வரை அங்கிருந்து அழைப்பு வரவேயில்லை. குறிப்பாக ஜெயலலிதாவிடம் அந்த சீனியர் தலைவர் பேசியதில் கூட்டணி என்ற அழைப்பை கூட விடுக்கவில்லை. அதேசமயம் 5 தொகுதிகள் மட்டும் என்றால் சரி என்ற நிலையிருந்தால், ஜெவிடம் பேசுவதாக ஓ.பி உள்ளிட்ட அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட தலைவர்கள் சொல்ல த.மா.கா தலைவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் த.மா.காவை இப்போது ஸ்தாபித்த தலைவர்கள் மட்டும் வாசன், எஸ்.ஆர்.பி, ஞானசேகரன், விடியல் சேகர், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம் என ஆறுபேர். 5 சீட் என்றால் யார் பகிர்ந்து கொள்ள முடியும்? அ.தி.மு.க கூட்டணி கரை சேர்த்தாது என்ற முடிவில் தி.மு.கவிடம் அணுகியிருக்கிறார்கள். திமுக சைடிலோ, ‘உங்களுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. வேண்டுமென்றால் காங்கிரஸிடம் பேசிக் கொள்ளுங்கள் !’ என சொல்லியிருக்கிறது.

காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளில் சிலருடன் இணக்கமாக உள்ள த.மா.கா தலைவர்கள் பேசியதில், ஏற்கனவே 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு தொகுதி வீதம் 32 தொகுதிகளை காங்கிரஸிற்கு தர தி.மு.க ஒப்புக் கொண்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் எதிர்பார்ப்பதோ 50 ப்ளஸ் தொகுதிகள். விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் 32க்கு மேல் தரமுடியாது. அவர் வரா விட்டால் இன்னமும் 18 தொகுதிகள் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த தொகுதிகளே எங்களுக்கு பற்றாக்குறைதான். அதனால் காங்கிரஸில் ஒருத்தர் கூட த.மா.கா கூட்டணிக்கு வருவதை விரும்பவில்லை. அப்படி தே.மு.தி.க கூட்டணிக்கு வராவிட்டால் வேண்டுமானால் உங்களையும் இணைத்து சீட் கேட்கலாம். அதற்கும் திமுக தலைவர் சம்மதிக்க வேண்டும்.எனவே கலைஞரிடமே பேசிக் கொள்ளுங்கள்!’ என்று தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து த.மா.காவின் தலைவர் வாசனே திமுக தலைவர் கலைஞரிடம் பேசியிருக்கிறார். அப்போது, ‘விஜயகாந்த் வராவிட்டால் பார்ப்போம். அப்படி வந்தாலும், நீங்கள் காங்கிரஸூடன்

இணக்கமாகித்தான் வரவேண்டும்!’ என்று தெளிவுபடுத்திவிட்டாராம். அதன் அடிப்படையில் தங்களுக்கு குறைந்தபட்சம் 23 சீட்டுகளாவது வேண்டும் என்று த.மா.கா சைடில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை விஜயகாந்த் வந்துவிட்டால் காங்கிரஸ் தன்னுடன் த.மா.காவை சேர்த்துக் கொள்ளுமா? அப்படியே ஆனாலும் எத்தனை சீட் தரும்? எனவே ம.ந.கூட்டணியிடமும் பேசியிருக்கிறது த.மா.கா. அதில் 50 சீட்டுகள் த.மா.கா சைடில் டிமாண்ட் வைக்கப்பட்டிருக்கிறது. அதை விஜயகாந்த் வந்தால் முடிவு செய்வோம். இப்போதைக்கு கூட்டணியில் இணையுங்கள்!’ என அங்கே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

‘இப்போது விஜயகாந்த் வராவிட்டால் எடுக்கும் முடிவின்படி திமுகவை நம்பி, அவர்களுடன் 2001 தேர்தலை போல் காங்கிரஸூடன் இணக்கமாகி கூட்டணி வைப்பதா? ம.ந.கூட்டணியில் ஐக்கியமாவதாக அறிவித்துவிடலாமா? என்ற திரிசங்கு நிலையில் உள்ளது த.மா.கா என்கிறார் இக்கட்சியின் மேல் மட்டத்துடன் நெருக்கம் பாராட்டும் காங்கிரஸ்-த.மா.கா நடுநிலையாளர் ஒருவர்.

பெயர் வெளியிட விரும்பாத அவர் தி இந்துவிடம் கூறுகையில், ‘1999 தேர்தலின்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது விழுப்புரத்தில் திண்டிவனம் ராமமூர்த்திக்காக பிரச்சாரம் செய்ய சோனியா வந்தார். அப்போது ஒரே மேடையில் ஜெவும், சோனியாவும் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோனியா வந்து அரை மணிநேரம் ஆகியும் ஜெயலலிதா வரவில்லை. இதோ வந்துவிடுவார்; அதோ வந்துவிடுவார் என்றே கட்சிக்காரர்கள் தெரிவித்தார்கள். கடைசியில் மயிலாப்பூரில் ஜெ பேசிக் கொண்டிருப்பதாக மத்திய உளவுத்துறை மூலம் தகவல் வர, அதில் வருத்தப்பட்டு மேடையேறி சிங்கிளாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றவர்தான் சோனியா. அதற்கு பிறகு ஜெவை சந்திப்பதில்லை என முடிவு எடுத்துவிட்டார்.

அதே முடிவை வைத்துத்தான் 2001 தேர்தலில் மூப்பனார் கூட்டணி வைத்துக் கொண்ட நிலையில் காங்கிரஸூடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிவிட்டார் ஜெ. அதே மாதிரியான விஷயத்தைத்தான் தி.மு.கவும் தற்போது கடைப்பிடிக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்கும் வேகத்தில் தி.மு.கவை எப்படியெல்லாம் உதாசீனப்படுத்தினர் த.மா.காவினர். அவர்களிடம் காங்கிரஸே உறவு வைத்துக் கொள்ளட்டும். அதுவும்விஜயகாந்த் வரா விட்டால்தான் என்ற உறுதியான நிலையில் உள்ளது!’ எனத்தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, ‘த.மா.காவுடன் காங்கிரஸ் இணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தவிர திமுக மாவட்டத்திற்கு ஒரு சீட் என காங்கிரஸிற்கு மொத்தம் 32 சீட் என்று ஒதுக்கீடு செய்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுவதும் வீண் கற்பனை. நாங்கள் குமரியில் கடந்த முறை திமுக கூட்டணியிலிருந்து 3 சீட் பெற்று இரண்டில் வெற்றி பெற்றோம். அங்கே சிட்டிங் சீட் 2 இருக்க, ஒன்று மட்டும் திமுக தந்தால் ஏற்றுக் கொள்வோமா? தவிர, தர்மபுரியில் எங்கள் கட்சிக்கு பலமே இல்லை. வன்னியர் பலம் உள்ள அங்கே காங்கிஸிற்கு ஒரு தொகுதி கொடுத்தால் ஜெயிக்க முடியுமா? இதெல்லாம நடக்காத விஷயம்!’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்