புதுச்சேரி பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்குமா?- பணியாளர்கள் சங்கம் சந்தேகம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 180 பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை இருக்குமா என்ற சந்தேகத்தை ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நல்வாழ்வுச் சங்கம் எழுப்பியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதிவாளர், நிதி அதிகாரி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட முக்கியமான 28 பதவிகளில் நிரந்தரமாக நியமிக்கப்படாமல் பொறுப்பு வகிப்போரே இருப்பதால் பல்கலைக்கழகத் தரவரிசை 87-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இச்சூழலில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 180 பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை இருக்குமா என்ற சந்தேகத்தை ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நல்வாழ்வுச் சங்கம் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

''புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2012 முதல் காலியாக இருக்கும் பதிவாளர், நிதி அதிகாரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் போன்ற முக்கிய சட்டப்பூர்வமான பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் காரணமாகப் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். முக்கியமாக நிர்வாகப் பதவிகளில் கலாச்சார இயக்குநர், பதிவாளர், நிதி அதிகாரி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நூலகர் ஆகிய பதவிகளில் நிரந்தர அதிகாரி இல்லாமல் பொறுப்பு வகிப்போர் மட்டுமே உள்ளனர்.

அதேபோல் டீன்களில் தமிழ் மொழி, மருத்துவ அறிவியல் பள்ளி, சட்டப்பள்ளி ஆகியவற்றில் பொறுப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். துறைகளின் தலைவர் பதவிகளில் கடலோரப் பேரிடர் மேலாண்மைத் துறை, உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை, இந்தி துறை, வெளிநாட்டு மொழிகளுக்கான மையம், சமூகவியல் துறை, அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறை, பெண்கள் ஆய்வு மையம், சமூக விலக்கு மற்றும் உள்ளடக்கிய கொள்கை ஆய்வு மையம், கணினி அறிவியல் துறை (காரைக்கால் வளாகம்), மின்னணு பொறியியல் துறை, மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மையம், நிகழ்கலைத் துறை, மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்புத் துறை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை ஆகிய பதவிகளில் நிரந்தரமானவர்கள் இல்லை.

நிர்வாகத்தில் கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநர், கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையம், தொலைதூரக் கல்வி இயக்குநர் என மொத்தம் 28 பதவிகளில் நிரந்தரமானவர்கள் இல்லாமல் பொறுப்பு வகிப்பவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

இது பல்கலைக்கழக வளர்ச்சியைத் தடுக்கிறது. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை திறம்படக் கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. போதிய வெளிப்படைத்தன்மை இல்லாத சூழலும் ஏற்பட்டது.

இச்சூழலில் மத்தியக் கல்வி அமைச்சக உத்தரவுப்படி புதுச்சேரி பல்கலைக்கழகம் 180 பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்கத் தயாராகி வருகிறது. உயர் பதவிகளில் முக்கியப் பொறுப்புகளில் ஆட்களை நியமிக்காமல், 180 பேராசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக நடக்குமா என்பதில் சந்தேகம் எழுகிறது.

மிக முக்கியமாகப் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி பதிவாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டியது மிக அவசியம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் சரிந்து தற்போது 87-வது இடத்துக்குச் சென்றுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மோசமான தரவரிசைக்குப் பதிவாளர், நிதி அதிகாரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நூலகர் போன்ற பணியிடங்களை நிரப்பாததே காரணம் ஆகும்''.

இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE