வழக்கால் புதுவை உள்ளாட்சித் தேர்தல் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்: காத்திருக்கும் கட்சிகள், வேட்பாளர்கள்

நீதிமன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏ தொடர்ந்த வழக்கால் உள்ளாட்சித் தேர்தல் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டு, உத்தரவுக்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தொடங்கி போட்டியாளர்கள் வரை அனைவரும் காத்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்துக்கு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

புதுவையின் 4 பிராந்தியங்களிலும் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறுசீரமைப்பு, வார்டுகள் இட ஒதுக்கீடு ஆகியவற்றில் குளறுபடி உள்ளதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கின. கூட்டணிக் கட்சிகளில் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்தது.

இந்த நிலையில் புதுவை முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், வார்டு மறுவரையறையிலும், பட்டியலினத்தவருக்கு வார்டுகளை ஒதுக்கீடு செய்ததிலும் குளறுபடிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த வழக்கானது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காகச் சட்டத்தை மீற முடியாது. வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறி, அன்றைய தினம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

புதுவையில் 15 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அரசியல் கட்சியினர் கூட்டணி, இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்ததால் கூட்டணி, இடப் பங்கீடு ஆகிய பேச்சுவார்த்தையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சிகளிடமும், தேர்தல் போட்டியாளர்களிடம் இடையே தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

குளறுபடிகள் இருப்பதை உயர் நீதிமன்ற நீதிபதிகளே கருத்தாகத் தெரிவித்திருப்பதால், அரசியல் கட்சியினர் தங்கள் பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளனர். தற்போது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்காகப் புதுவை அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர். இத்தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோர் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE