மது விலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்குக: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மது விலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரே நேரில் பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கிராம சுயராஜ்ஜியம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார். இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்ல தொடக்கமாகக் கருதலாம். அதே நேரத்தில் கிராமங்களுக்கு, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்க விடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்ஜியமாகும்.

ஒட்டுமொத்தத் தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மதுதான். மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறிவிட்டேன். ஆனாலும், மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்குச் சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். இந்தியாவில் அதிக இளம் விதவைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக விபத்துகள் மற்றும் தற்கொலைகள் நிகழும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதற்குக் காரணம் மதுதான். பள்ளிகளுக்குச் செல்லும் பதின்வயது பாலகர்கள்கூட வகுப்பறைகளில் மது அருந்திய நிகழ்வுகள் கரோனா காலத்திற்கு முன்பு வரை செய்திகளில் வந்துகொண்டுதான் இருந்தன. கரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாகக் குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள்தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே மது விற்பனை செய்வதாகக் கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

மராட்டிய மாநிலத்தில் ‘1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்குச் சட்டத்தின்’படி மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப் பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையைத் தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

இந்த யோசனையை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர் நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழக அரசு இந்த யோசனையையும் மதித்துச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம், ‘‘மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத்திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?’’ என்பதுதான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படாது.

அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பாமக தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கவும் பாமக தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும்.

எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராம சபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்