ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும்கொற்கையில், 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய `பொருநைநாகரிகத்தை’ வெளிக்கொணர்ந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. இதில், 2,000-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2-ம் கட்டமாகவும், பாண்டியர்களின் துறைமுக நகரான கொற்கையில் முதல் கட்டமாகவும் கடந்த 7 மாதங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் பணி நிறைவுபெற்றது. ஆதிச்சநல்லூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுநடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொற்கையில் 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. குறிப்பாக, 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்களை வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கு அறுக்கும் தொழிற்கூடம், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், ரோம் மற்றும் சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் உருவபொம்மைகள் எனஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகளையில் பரம்பு, பேட்மா நகரம், மூலக்கரை ஆகிய 3 இடங்களில் 18 குழிகளும், பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, பொட்டல் திரடு, செக்கடி ஆகிய நான்கு இடங்களில் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக 8 குழிகளும் அமைக்கப்பட்டன. பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண்சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன.
ஆவாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத்தன.
சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிரபரணிக்கரை `பொருநை நாகரிகத்தின்’ வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதை பெருமைப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் ரூ.15 கோடி மதிப்பில் `பொருநைஅருங்காட்சியகம்’ அமைக்கப்படும். அங்கு, ஆதிச்ச நல்லூர்,சிவகளை மற்றும் கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வும், கொற்கையில் கடல்சார் ஆய்வும் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago