பிங்க் மாதத்தில் நாம் அனைவரும் புற்றுநோய்க்கான விழிப்புணர்வைப் பெறுவோம்: புதுவை ஆளுநர் தமிழிசை

By அ.முன்னடியான்

பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதம். ‘பிங்க் மாதம்’ என்றும் அழைப்பார்கள். பெண்கள் அனைவரும் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டால் உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும். தென்படும் அத்தனை கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல.

ஆனால், கட்டிகள் தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவ விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். இந்த பிங்க் மாதத்தில் நாம் அனைவரும் புற்றுநோய்க்கான விழிப்புணர்வைப் பெறுவோம். புற்றுநோயில் இருந்து விடுபடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.’’

இவ்வாறு அந்த வீடியோவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE