புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (அக். 01) அதிகாலையில் பரவலாக கனமழை பெய்தது. இதில், புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளம் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு மாணவர் விடுதிகள், வேளாண் விற்பனைக் குழு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் தேங்கியது.
மேலும், ராஜகோபாலபுரம், பெரியார் நகர், கம்பன் நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்று ஓடியது.
மேலும், கழிவுநீர், குப்பைகள் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கொட்டும் மழையிலும் குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறித் தவித்தனர்.
சிலர், வீடுகளுக்குத் தேங்கிய மழை நீரைப் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது, இதே நிலை நீடிப்பதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நகர்ப் பகுதி மக்கள் கூறியதாவது:
"புதுக்கோட்டையில் சில கிலோ மீட்டர் தூரம் மேடான பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டுப்புதுக்குளத்தில் நிரம்பி, அங்கிருந்து தெற்று வெள்ளாற்றில் கலக்கும் வகை கால்வாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பின்னர், காட்டுப்புதுக்குளம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டதால், தண்ணீர் முறையாக வெளியேற முடியாமல் அலுவலகங்கள், குடியிருப்புகளுக்குள் சூழ்ந்துவிடுகிறது.
இதனால், அதனருகே உள்ள பெரியார் நகர், ராஜகோபாலபுரம், கம்பன் நகர் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துவிடுகிறது. சிலரது வீடுகளுக்குள் கழிவுகள் புகுந்ததால், அச்சத்தோடு மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீட்டின் தளத்தைவிட சாலை அதிக உயரத்தில் உள்ளதால், வீட்டுக்குள் தேங்கிய தண்ணீர் அவ்வளவு எளிதாக வெளியேறுவதில்லை.
பெரும்பாலும் இப்பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்போராக இருப்பதால், சொல்லொணாத் துயர நிலைக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறை கனமழை பெய்யும்போதும் இதே நிலை தொடர்கிறது. அதேபோன்று, மழை பெய்யும்போது மட்டும் நகராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுவார்களே தவிர, அதன்பிறகு கண்டுகொள்வதே இல்லை.
எனவே, இப்பகுதியில் தேங்கும் மழை நீரைக் காட்டாற்றில் கலக்கும் வகையில் பிரத்யேகக் கால்வாய் அமைக்க வேண்டும். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் விரைவாக இப்பணியைத் தொடங்க வேண்டும்".
இவ்வாறு நகர்ப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மழை அளவு (செ.மீட்டரில்):
மணமேல்குடியில் 185, பொன்னமராவதியில் 110, புதுக்கோட்டையில் 95, ஆலங்குடியில் 87, அரிமளத்தில் 82, ஆவுடையார்கோவிலில் 80, பெருங்களூர், மழையூர், மீமிசலில் தலா 78, ஆயிங்குடியில் 67, நாகுடியில் 64, காரையூரில் 51, குடுமியான்மலையில் 49, ஆதனக்கோட்டையில் 45, திருமயத்தில் 42, கீழாநிலை, அன்னவாசலில் தலா 38, கறம்பக்குடியில் 35, கீரனூரில் 30, அறந்தாங்கியில் 27, கந்தர்வக்கோட்டையில் 24, விராலிமலையில் 17, இலுப்பூரில் 10, உடையாளிப்பட்டியில் 9 செ.மீ. மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago