வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 3 மாதங்களாக பல முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சென்னை திருவான்மியூர், தாம்பரம், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொள்முதல் செய்யப்பட்ட மதுபானம், கடைகளுக்கு அனுப்பியது போக, இருப்பில் உள்ள மதுபானங்களை கணக்கீடு செய்ததில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
மதுரை திருமங்கலம் வட்ட வழங்கல் அதிகாரி (டிஎஸ்ஓ) அழகர்சாமி(58). இவர் தனது நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 92 ரேஷன் கடை பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில்,மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரது அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, அழகர்சாமி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர்களை துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு சோதனையின்போது வட்டார போக்குவரத்து அலுவலரின் அறைக்குள் இருந்த தரகர்கள் வெளியே ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அங்கிருந்த கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜன்னல்களுக்கு வெளியே தரகர்கள் மற்றும் அலுவலர்களால் வீசி எறியப்பட்டிருந்த பணம், ஆர்சி புத்தகம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 மணி நேர சோதனையில் கணக்கில் வராத ரூ.1,18,950 பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் மற்றும் தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் நில அளவைப் பிரிவில், நடந்த சோதனையில் ரூ.27,500-ஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மாகாளிப்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த (ஊழியர்கள் அல்லாத) பக்ருதீன், ஆனந்தன் ஆகியோரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இரவு வரை சோதனை நீடித்தது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.70,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் பேபி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஒப்பந்ததாரர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று, அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகம், சிதம்பரத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
ஓசூரில் ரூ.2.58 லட்சம் பறிமுதல்
கர்நாடக எல்லையை ஒட்டி ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள ஆர்டிஓ உள்வழி சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.58 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.
சிதம்பரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம், தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சில்லாங்காட்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago