கோரிக்கைகளை ஏற்காவிடின் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் புறக்கணிக்கப்படும்: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தகவல்

By இரா.கார்த்திகேயன்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்காவிடின் நவம்பர் மாதம் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் புறக்கணிக்கப்படும் என, திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி, பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் இன்று (செப். 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.தங்கவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ச.முருகதாஸ் பேசினார்.

"கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அவசியமான நில அளவைப் பயிற்சி மற்றும் பவானிசாகர் அடிப்படைப் பயிற்சிகளை, உடனடியாக உரிய காலத்தில் மாவட்ட அளவில் நடத்திட வேண்டும். இல்லையெனில், பயிற்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை அரசாணையின்படி பணி வரன்முறைப்படுத்திட வேண்டும். சென்னை நகரப் பட்டியலிலிருந்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பயிற்சி பணியிடங்களுக்கு உரிய விகிதாச்சாரம் கடைப்பிடிக்காமல், அதிக அளவில் நபர்களை ஒதுக்கீடு செய்வதனை முறைப்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினைப் பாதுகாத்து, அனைத்து நிலை அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து அரசாணைகள் வெளியிட வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தியதற்கான செலவின நிதியினை முழுமையாக வழங்கிட வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியத்தை உடனே வழங்க வேண்டும்.

பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் மசால்சி ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்பிட வழங்கப்பட்ட அரசு ஆணையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து, கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், வரும் நவ. 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்களை புறக்கணிப்போம்" என்றனர்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆட்சியர் அலுவலகப் பொறுப்பாளர் சதீஷ்குமார் நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொறுப்பாளர்கள் மோகனன், ராஜேந்திரன் உட்பட வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE