சாதாரண மக்களுக்கும் பயனளித்த வானொலியை முடக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ள கி.வீரமணி, மத்திய அரசு தன் முடிவைக் கைவிடாவிட்டால், அறப்போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாட்டில் இன்னமும் - எவ்வளவுதான் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் முதற்கொண்டு பலதரப்பட்டவர்களும் விரும்பி கேட்டுப் பயன்பெறுவது வானொலி நிகழ்ச்சிகள் மூலமே.
வானொலியின் பயன்பாடு
வானொலி மூலம் பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்ட கல்வியறிவுப் புரட்சி; பொதுத் தகவல் அறிவதிலிருந்து, தேர்தல் கால முடிவுகளைத் துல்லியமாகக் கேட்டு அறிந்து கொள்வதற்கும் வானொலிகளின் பயன்பாடு மிகவும் சிறப்பானவை என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையினர் - பிரச்சார் பாரதி நிறுவனம் தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரியில் உள்ள வானொலி நிகழ்ச்சி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்புகளை இம்மாதத்துடன் முடக்க முடிவு செய்திருப்பதாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
தமிழ்நாட்டின் பன்முகத் தன்மையை எதிரொலிக்கும் இந்த வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை நிதிப் பற்றாக்குறை காரணமாக முடக்குவது என்று கூறுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
வாழ்வாதாரங்கள் பாதிப்பு
இந்த வானொலி நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். நிகழ்ச்சிகள் வட்டாரக் கலாச்சாரங்களைப் பிரதிபலித்தும், பல இசைக்கலைஞர்கள், இலக்கியப் படைப்பாளர்கள், நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்புகளைத் தந்து, பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, அறிவார்ந்த வகுப்புகளில் அமரும் மாணவர்களைப் போல, செவிவழிப் பாடங்கள் போல பலவற்றைக் கேட்டு, கற்று மகிழும் வாய்ப்பும், அவர்தம் வாழ்வாதாரங்களும் இத்தகையதொரு முடிவால் அடியோடு கேள்விக்குறியாகி விடக்கூடும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் வெகு நீண்ட காலமாக வேளாண் செய்திகளையும், கால நிலைக்கேற்ற வல்லுநர்களின் அறிவுறுத்தல்களையும் கேட்டு பயிர்த் தொழிலை செம்மைப்படுத்தி, சீர்மிகு வாழ்வினைப் பெறுவதையும்கூட இந்தத் திட்டம் தடுப்பதாக அமையும் ஆபத்து இருக்கிறது. வேளாண் தொழில் சார்ந்த வழிகாட்டுதல் என்ற அரிய வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
ஏற்கெனவே, நாடகக் கலைஞர்கள், தெருகூத்துக் கலைஞர்கள் உட்படப் பலரும் கரோனா காலத் தொற்று, அரசு அறிவித்த ஊர் முடக்கம் காரணமாக, தங்கள் வாழ்வை வறுமையின் குடியிருப்பாக்கி, மூச்சுத் திணறி, சிலர் தற்கொலை முடிவுக்குக்கூட தள்ளப்படும் நிலையில், இது மேலும் வெந்த புண்ணில் வேலைச் செருகுவதாகவே ஆகிவிடக் கூடும்.
முடிவைக் கைவிடுக
எனவே, மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறையைச் சார்ந்த பிரச்சார் பாரதி இந்தத் தவறான முடிவைக் கைவிட்டு, பழைய நிலையே தொடரும் என்ற முடிவினை மேற்கொள்ளவேண்டுமென மத்திய அரசினை கோடான கோடி கேட்பாளர்கள், விவசாயிகள், வானொலிக் கலைஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தால், அவர்களைத் திரட்டி, அறப்போராட்டம் நடத்துவதும் தவிர்க்க இயலாததாகிவிடக் கூடும் என்பதை அறிவிக்கிறோம்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago