சிங்காரச் சென்னை 2.0 திட்டம்; ரூ.500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (செப். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 2021-22ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால் இக்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சென்னை மாநகரக் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும், சிங்காரச் சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் இவ்வரசால் தீட்டப்பட்டு இவ்வாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வேறு பல திட்டங்களை இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அறிவித்தார்.

இதனடிப்படையில் பெருநகர சென்னை மநாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சர்வதேச தரத்துக்கு இணையாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தூய்மை சென்னையின் கீழ் குப்பை மற்றும் கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை மீட்டெடுத்தல், நுண்ணிய உர மையங்களை வலுப்படுத்துதல், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் நவீன முறையில் அகற்றுதல், குடிசைப் பகுதிகளில் தேங்கும் அதிகப்படியான குப்பைக் கழிவுகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நவீன மயமாக்குதல், பசுமை சென்னையின் கீழ் மாநகரம் முழுவதும் பெருமளவில் மரங்கள் நடுதல், நீர்மிகு சென்னையின் கீழ், குடிநீர் வழங்கல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களைப் புனரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாகக் கொண்டுவருதல், எழில்மிகு சென்னையின் கீழ், பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல், பாலங்களின் கீழ்ப்பகுதிகள், சாலை இணைப்புகள் மற்றும் சாலை மையத்தடுப்புகள் அழகுபடுத்துதல், நகரின் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைப்பதன் மூலம் தொடர்ந்து மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் நடைபாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், நலமிகு சென்னையின் கீழ், பொதுக் கழிப்பறைகள் அமைத்தல், நகரம் முழுவதும் நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் தரமான பொதுக் கழிப்பறைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துதல் மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து ஊக்குவித்தல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கல்வியில் சென்னையின் கீழ், சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், படிப்பதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கற்றல் மையங்களை ஏற்படுத்துதல், நவீன நூலகங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (M.C.1) துறை அரசாணை (MS) எண்.74, நாள்.28.09.2021. அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், கண்காணிக்கவும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டப் பணிகளுக்கான தொடர்பு அமைப்பாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்